சூரிய நமஸ்காரம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

உலகிற்கு இருளை நீக்கி ஒளியைத் தருபவன் சூரியன். கண்ணிற்கு ஒளியும், உடலுக்கு பிரகாசத்தையும், மனதுக்கு வலிமையையும் தரும். சூரிய பகவானை காலை நேரத்தில் கதிரொளி முதலில் படரும் வேளையில் கிழக்கு முகமாக நின்று வணங்குவதுதான் சூரிய நமஸ்காரம் ஆகும். சூரிய நமஸ்காரம் செய்வதற்கு முன் சூரியனை வழிபட வேண்டும்.

சூரிய வழிபாடு


சூரியனை வழிபட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.

சூரிய நமஸ்காரம் பல்வேறு யோகாப்பியாசங்களை இணைப்பது. அளவாக சுவாசத்தை விடப் பயிலுவது, உடம்பின் பகுதிகளை இயக்கி சுறுசுறுப்படையச் செய்வது, சூரிய பகவானின் அருளைப் பெற்று மனதை பிரகாசமடையச் செய்வது ஆகிய யாவுமே சூரிய நமஸ்காரம் மூலம் நிறைவேறுகிறது.

சூரிய நமஸ்காரம் முக்கியமாகக் கண்களுக்கும், முதுகெலும்பிற்கும் சக்தியை அருள வல்லது, சூரிய நமஸ்காரத்தில் பன்னிரெண்டு யோகப் பயிற்சிகள் உண்டு. ஒவ்வொரு பயிற்சியையும் செய்யும் போது மனத்தில் அதன் பிரதிபலிப்பாகப் பிரகாசமும், அமைதியும், ஆனந்தமும் உருவாகிறது. உடலுக்கும், உள்ளத்துக்கும் இணைந்த பயிற்சி என்பதே சூரிய நமஸ்காரத்தின் தனிப் பெருமை.

சூரிய நமஸ்காரம் செய்முறையும் அதன் பலன்களும்

சூரிய நமஸ்காரம் பன்னிரண்டு நிலைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிலையின் செய்முறை பயிற்சியும், பயிற்சியால் ஏற்படும் பலன்களும் தெளிவாகப் இப்போது பார்ப்போம்.

முதல் நிலை

சூரிய பகவானை நோக்கி நிமிர்ந்து நிற்க வேண்டும். இரு குதிங்கால்களையும் சேர்த்து வைத்து, இரு கரங்களையும் குவித்து, இரு கரங்களின் பெருவிரல்கள் மார்பைத் தொட்டுக் கொண்டு இருக்குமாறு வைத்துக் கொண்டு சுவாசத்தை வெளிவிட்டவாறு நிற்க வேண்டும்.

முதல் நிலையின் பலன்கள்

கண்கள், இருதயம், சுவாசப்பைகள், ஜீரணக்கருவிகள் இவை தம் வேலைகளைச் சரியாகச் செய்யத் தூண்டப்படும்,

இரண்டாம் நிலை

சுவாசத்தை உள்ளிழுத்தாவாறு இரு கரங்களையும் தலைக்கு மேல் உயர்த்தி, இடைக்கு மேற்பட்ட பகுதியை மெதுவாக வளைத்து முதுகெலும்பை எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் பின்னால் கொண்டு செல்ல வேண்டும்.

இரண்டாம் நிலையின் பலன்கள்

இடுப்பு சிறுத்து, வயிறு ஒட்டி, மார்பு அகன்று நிமிர்ந்து நடக்கச் செய்யும் முதுகெலும்பு பலப்படும்.

மூன்றாம் நிலை

சுவாசத்தை வெளிவிட்டவாறு முதுகெலும்பை முன்புறமாக வளையச் செய்து குனிந்து முழங்காலை வளைக்காமல் கரங்களை கால்களின் அருகில் தரையில் பதித்து கைவிரல்கள் கால் விரல்களுக்கு இணையாக இருக்கப்படும். முகம் முழங்காலுக்கு இணையாக இருக்கட்டும்.

முன்றாம் நிலையின் பலன்கள்

இடுப்பு, வயிறு, கால்கள், கைகள் வலிமை பெறுகின்றன.

நான்காம் நிலை

இடது காலை முழங்கால் மடிப்பில் வளைத்துக்கொள். முழங்கால் தரையில் பதிந்து மண்டியிட்ட நிலையில் இருக்க வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்து வலது காலை பின்னால் நீட்டவும். இரு கைகளும் இடது முழங்காலுக்கு இரு பக்கங்களிலும் தரையில் ஊன்றி இருக்க வேண்டும். முகத்தை நிமிர்த்தி சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும்.

நான்காம் நிலையின் பலன்கள்

கால்களும், கரங்களும் இடுப்பும் வலிமை பெற்று நம் விருப்பப்படி இயங்கும் தன்மையைப் பெறும்.

ஐந்தாம் நிலை

மேலே உள்ள நிலையில் இருந்தவாறு இடது காலையும் பின்னுக்குத் தள்ள வேண்டும். இரு கால்களும் சேர்ந்த நிலையில் இருக்க வேண்டும். இரு கைகளும் தரையில் ஊன்றிய வண்ணம் இருக்கும். உடம்பின் தாங்கிக் கொண்டிருக்கின்றன. முதுகையும், கைகளையும் நிமிர்த்தி சுவாசத்தை வெளியிட வேண்டும்.

ஐந்தாம் நிலையின் பலன்கள்

கழுத்துதசை உருண்டு திரண்டு வலிமை பெற்று உடலுக்கு அழகைத் தரும். முதுகெலும்பு இளமையடைந்து சுறுசுறுப்பாக செயல்படும்.

ஆறாம் நிலை

சுவாசத்தை வெளிவிட்டவாறு முழங்கைகளை வளைத்துக் கொள். உடம்பை தரைவரை தாழ்த்தி நெற்றி, மார்பு, முழங்கால் ஆகியவற்றால் தரையைத் தொடவும். உடம்பின் மற்ற பகுதியில் தரையில் படவேண்டாம். இடையின் முற்பகுதியை வளைத்து பின்புறம் உயரச் செய்ய வேண்டும்.

ஆறாம் நிலையின் பலன்கள்

கைவிரல், கால், கால் விரல்கள், இடுப்பு, முதுகு வலிமை பெறும். மார்பு விசாலப்படும்.

ஏழாம் நிலை

உடம்பை இடுப்பிலிருந்து மேலே நிமிர்த்தவும். மார்பு முனபுறமாகவும், தலை உயர்ந்து பின்புறமாகவும் இருக்க வேண்டும். புஜங்களை நீட்டி விரியச் செய்து. முதுகெலும்பை பின்புறமாக வளையச் செய்ய வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்தவாறு முடிந்தவரை உடம்பை வளைக்கவும், கைகளும், கால்களும் தரையில் ஊன்றி இருக்க வேண்டும். உடம்பின் பாரம் முழுவதையும், உள்ளங்கைகளும், கால்களும் தாங்கிக் கொண்டிருக்கின்றன.

ஏழாம் நிலையின் பலன்கள்

இந்நிலையில் உடலிலுள்ள எல்லா பாகங்களும் உருண்டு, திரண்டு உடம்பிற்கு அழகைத் தரும். கண்கள் ஒளி பெறும். இந்த பயிற்சியால் முதுகு அதிகமாய் அழகு பெறுகின்றது. முதுகெலும்பு வளைவதால் பலப்படுகிறது. நம் உடம்பு அசையும் தன்மை அதிகரிகின்றது.

எட்டாம் நிலை

இடுப்பை மேலே உயர்த்தி பின்னுக்கு கொண்டு செல்ல வேண்டும். சுவாசத்தை வெளிவிட்டவாறு இதைச் செய்ய வேண்டும். முதுகை வளைத்து தலையை முன்புறமாக இரு கைகளுக்கும் இடையில் கொண்டு வரவேண்டும். கைகளும், பாதங்களும் தரையில் ஊன்றி உடம்பின் பாரத்தை தாங்கிக் கொண்டிருக்கும். இது தான் சூரிய நமஸ்காரத்தின் உச்சநிலையாகும்.

எட்டாம் நிலையின் பலன்கள்

வயிற்றுப் பகுதியிலிருக்கும் வேண்டாத சதைகளைக் குறைத்து வயிறு பலமடையும், இடுப்பு, முதுகு, கை, கால்கள் வலிவு பெறும்.

ஒன்பதாம் நிலை

இனி இறங்கும் நிலை, அதாவது இயல்பு நிலைக்குத் திரும்பும் நிலை. இடது காலை மடக்கி கைகளின் அருகில் கொண்டு வரவும். சுவாசத்தை உள்ளிழுத்து வலது காலை பின்புறம் நீட்டவும்.

இந்நிலை நான்காவது நிலை போன்றது மற்றும் நான்காம் நிலையின் பலனே இதற்கும் உண்டு

பத்தாம் நிலை

வலது காலையும் கைகளின் பக்கத்திற்கு கொண்டு வரவும். கால்களை ஊன்றி தலையைக் குனியவும். இந்நிலை மூன்றாவது நிலை போன்றது, ஆதலால் மூன்றாவது நிலையின் பலனேயே இது அளிக்கும்.

பதினொன்றாம் நிலை

சுவாசத்தை உள்ளிழுத்து உடம்பை நீட்டி நிமிர்ந்து கைகள் இரண்டையும் புஜத்துடன் தலைக்கு மேல் கொண்டு போக வேண்டும். இரண்டு உள்ளங்ககைகளும் சேர்ந்திருக்க வேண்டும்.

இந்நிலை இரண்டாவது நிலையே போன்று இருக்கும், ஆதலால் இரண்டாம் நிலைக்குரிய பலனே இதற்கு கிடைக்கும்.

பன்னிரெண்டாம் நிலை

நிமிர்ந்து நின்றவாறு இரு கைகளும் கூப்பிய நிலையில், இரு கைகளின் பெருவிரல்களும் மார்புப் பகுதியை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். இந்நிலை முதல்நிலையே போன்று இருக்கும், ஆதலால் முதல் நிலைக்குரிய பலன்களே இதற்கும் கிடைக்கும்.

இதுவே சூரிய நமஸ்காரம். இதனை இளங்காலைப் பொழுதில் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் ஓரிரு தடவை செய்தாலும் பழகிய பின் பன்னிரெண்டு முறைகள் செய்வது உடலுக்கு நல்ல பலனைத் தரும்.

சூரிய நமஸ்காரம் பன்னிரெண்டு முறை செய்த பின் சாந்தியாசனம் நிலையில் தரையில் முதுகை அழுந்தப்படுத்தி கை, கால் மூட்டுக்களைத் தளர வைத்து உச்சி முதல் பாதம் வரை உடம்பை முழுமையாகத் தளர்த்தி ஓய்வடையச் செய்ய வேண்டும்.

குறிப்பு

மான் தோல் விரிப்பு ஞானத்தையும், புலித்தோல் விரிப்பு செல்வத்தையும், தர்ப்பை விரிப்பு மோக்ஷத்தையும் தரும். வஸ்திர விரிப்பு தீமை நீங்கவும், சித்திரக் கம்பளம் விரிப்பு சகல நன்மையும் கிடைக்க உதவும்.

Recent Post

RELATED POST