வெயில் அதிகம் இருக்கும் நேரத்தில் நாம் வெளியில் சுற்றினால், அதிக வெப்பத்தினால் நமது உடல் அதிக நீரை வியர்வை மூலமாக வெளியேற்றுகிறது. அதிக நீரை உடல் வெளியேற்றி விடுவதால் உடலில் நீர்சத்து குறைந்து விடுகிறது. இதற்கான வீட்டு மருத்துவம் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
பொதுவாக உடலில் நீர் இழக்கும் காரணங்கள்
காய்ச்சல்
உடலில் உள்ள நோய்க்கிருமிகளை அழிப்பதற்காக உடல் வெப்பம் ஆகிறது. இதனால் உடலில் நீர் குறைகிறது.
வயிற்றுப்போக்கு
உடலுக்கு சேராத உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது சில நேரங்களில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, அதன்மூலம் உடலிலுள்ள நீர் சத்துக்கள் வெளியேறிவிடும்.
குமட்டல் வாந்தி
உடலுக்கு சேராத சிலவற்றை வாய்வழியாக உடல் வெளியேற்றிவிடும். இந்த சமயத்திலும் உடல் அதிகப்படியான நீரை வெளியேற்றிவிடும்.
உடற்பயிற்சி
சாதாரணமாக உடற்பயிற்சி செய்யும்போது வியர்வை வெளியேறும். சிலர் அதிகப்படியான எடை அல்லது கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்ளும்போது, அதிகப்படியான நீரை வியர்வையாக உடல் வெளியேற்றுகிறது.
உடலில் நீர் இல்லை என்பதை குறிக்கும் அறிகுறிகள் (dehydration)
- உதடு வறட்சி
- தலைசுற்றல்
- அடர்த்தியான நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல்
உடல் நீர் வறட்சி போக்கும் விட்டு மருத்துவம்
வாழைப்பழம்
அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் இந்த வாழைப்பழம். தினமும் இரண்டு வாழைப்பழம் எடுத்துக்கொண்டால் உடலுக்கு தேவையான பொட்டாசியம் சத்தை தருகிறது. இதனால் உடலில் அதிகப்படியான நீர் இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.
மோர்
தினசரி மூன்று அல்லது நான்கு தடவை மோர் அருந்தினால் உடலுக்கு தேவையான பொட்டாசியம் சத்தையும், மக்னீசியம் சத்தையும் உடலுக்கு அளிக்கிறது. இதனால் உடலில் நீர்சத்து குறையாமல் பாதுகாக்கிறது.
இளநீர்
இயற்கை கொடுத்த மிக அற்புதமான ஒரு பானமாகும். இளநீரை தினந்தோறும் எடுத்துக்கொண்டால் உடலுக்கு அத்தியாவசியமாக தேவையான பொட்டாசியம், சோடியம் மற்றும் மினரல்ஸ் போன்றவற்றை உடலுக்கு தருகிறது. இளநீரை ஆறுமாத வயதிற்கு மேலிருக்கும் குழந்தைக்கு கொடுக்கலாம். (ஆறு மாதத்திற்கு கீழிருக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது)
தயிர்
ஒரு கப் தயிர் எடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனை எடுத்துக்கொண்டால் உடலுக்கு தேவையான நீர் சத்தினை உடலுக்கு தருகிறது.
உப்பு, சர்க்கரை, தண்ணீர்
சில நேரங்களில் மேலே குறிப்பிட்ட உணவுகள் கிடைக்க வாய்ப்பிருக்காது. அந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் உப்பு சர்க்கரையை வைத்து தீர்வு காணலாம்.
அரை டீஸ்பூன் உப்பு, 6 டீஸ்பூன் சர்க்கரை, நான்கு கப் தண்ணீரில் உப்பு மற்றும் சர்க்கரை நன்றாக கரையும் வரை கலந்து பிறகு அந்த தண்ணீரை அருந்தினால் உடலுக்கு தேவையான நீர்சத்து கிடைத்துவிடும்.
தண்ணீர்
முக்கியமாக ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். குறைந்தபட்சம் தாகம் எடுக்கும் போதெல்லாம் தவறாமல் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரே நேரத்தில் அதிகப்படியான தண்ணீர் எடுத்துக் கொண்டால் தேவையற்ற தண்ணீரை உடல் வெளியேற்றிவிடும். ஒரு குறிப்பிட்ட இடைவேளை விட்டு ஒரு கப் தண்ணீர் எடுத்துக்கொண்டால் தண்ணீரில் உள்ள சத்து உடலில் முழுமையாக சேரும்.
நாம் தினந்தோறும் சரியான விகிதத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டாலே உடலில் எந்தவித நோயும் அண்டாது.
முள்ளங்கி
முள்ளங்கி சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து வழங்கும். இது மிக எளிதில் செரிமானமாகும். உடல் எடை குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.
கேரட்
கேரட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், பீட்டா கரோட்டின், புரோட்டீன் அதிகம் உள்ளதால் உடல் வறட்சியை போக்கி சருமத்தையும் பொலிவாக வைத்திருக்கும்.