பகலில் சூரிய ஒளியின் காரணமாக நிலமும், நீரும் அதிக வெப்பமடைகின்றன. நீரைவிட நிலமானது விரைவில் அதிக அளவு வெப்பத்தை அடையும் காரணத்தினால் கடலைவிட தரை அதிக அளவு வெப்பத்தை அடைகிறது.
அதிக வெப்பத்தின் காரணமாக தரையிலுள்ள காற்று சூடாகி விரிவடைகிறது. அவ்வாறு விரிவடைவதால் அந்தக் காற்று இலேசாகி மேலே சென்று விடுகிறது. அவ்வாறு மேலே சென்றவுடன் அங்கு குறைந்தழுத்தக் காற்று மண்டலம் ஏற்படுகிறது. காற்று அதிக அழுத்தப் பகுதியிலிருந்து குறைந்த அழுத்தப் பகுதியை நோக்கி வீசும் தன்மை உடையது.
இதன் காரணமாக அதிக அழுத்தப் பகுதியான கடலிலிருந்து குறைந்த அழுத்தப் பகுதியான தரையை நோக்கிக் கடல்காற்று வீசுகிறது.
இதனால் படகில் பகலில் எதிர்காற்றில் (மின பிடிக்கச் செல்வது) பயணம் செய்வது கஷ்டமாக இருக்கும். இதனால் மீனவர்கள் பகலில் மீன் பிடிக்கச் செல்ல மாட்டார்கள். மாலையில் சூரியன் மறைந்ததும் கடலும், தரையும் வெப்பத்தை வெளியிட்டுக் குளிர ஆரம்பி’கின்றன. கடலைக் காட்டிலும் தரை விரைவில் குளிர்ச்சி அடையும் தன்மை வாய்ந்தது.
இதனால் தரையில் அதிக அழுத்தக் காற்று மண்டலம் ஏற்படுகிறது. காற்று அதிக அழுத்தப் பகுதியிலிருந்து குறைந்த அழுத்தப் பகுதியை நோக்கி வீசும் தன்மை உடைய காரணத்தினால் (மாலைக்கு பிறகு) தரையிலிருந்து காற்று கடலை நோக்கி வீசுகிறது. அப்போது கடலில் பயணம் செய்வது எளிதாக இருக்கும் என்ற காரணத்தினால் மாலையில் பயணம் மேற்கொண்டு இரவில் மீன் பிடிக்கச் செல்கிறார்கள். காலை ஆனவுடன் மீன் பிடித்துக கொண்டு திரும்பி விடுகிறார்கள்.