உருவத்தை வைத்து ஒருவரை எடை போட கூடாது. நமது லட்சியம் குறிக்கோள் சரியாக இருந்தால் போதும் வாழ்வின் உயரத்தில் செல்லலாம் என்பதற்கு ஜாக் மா ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
இவர் சீனாவின் மிகப்பெரிய தொழிலதிபரும் அலிபாபா ஆன்லைன் வர்த்தகத்தின் நிறுவனரும் ஆவார்.
ஜாக் மா 1964ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ம் தேதி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். இவருடைய குழந்தை பருவத்தில் அங்கு வாழும் மக்கள் மேற்கத்திய உலகத்தோடு தொடர்பில்லாமல் இருந்து வந்தனர். இது அவருடைய ஆர்வத்தை தூண்டியது. புதிய திறமைகளை பெற குழந்தை பருவத்திலே முயன்று வந்தார் ஜாக் மா. சிறுவயதிலிருந்தே ஆங்கிலம் பேச முயற்சி எடுத்தார்.
ஜாக் மாவின் ஊரில் 1972 ம் ஆண்டு முதல் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தினர் ஜாக் மா. ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதற்காக கட்டணமில்லாமல் பயணிகளிடம் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றினார். இதன் மூலம் தனது ஆங்கில திறனை வளர்த்துக்கொண்டார். இதனால் வெளிநாட்டு நட்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை அவரிடம் வந்தது.
ஜாக் மாவின் உருவத்தை பலரும் ஏளனம் செய்ததால் இவருக்கு தாழ்வு மனப்பான்மை உருவானது. இவரிடம் போராடும் குணம் இயல்பாகவே இருந்தது.
ஆரம்பபள்ளியில் இரண்டு முறை தோல்வியடைந்து மூன்றாவது முறைதான் வெற்றி பெற்றார். அதே போல் நடுத்தர வகுப்பில் மூன்று முறை தோல்வியடைந்த பிறகுதான் வெற்றி பெற்றார் ஜாக் மா.
பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக விண்ணப்பித்தார். ஆனால் அவருடைய விண்ணப்பம் மூன்று முறை நிராகரிக்கப்பட்டது. சற்றும் மனம்தளராமல் முயற்ச்சி செய்து நான்காவது முறை விண்ணப்பம் செய்து B.A ஆங்கிலத்தில் சேர்ந்து பட்டம் பெற்றார். அதன் பிறகு ஹார்ட்வேர் பல்கலைக்கழத்தில் சேருவதற்க்காக விண்ணப்பித்தார். அங்கு அவருடைய விண்ணப்பம் 10 முறை நிராகரிக்கப்பட்டது. பிறகு அதே பல்கலைக்கழத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அப்போது அவர் பேசிய போது தான் நிராகரிக்கப்பட்ட கதையை அங்கு தெரிவித்தார்.
ஜாக் மா கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட வேலைகளுக்கு முயற்சி செய்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஜாக் மாவின் ஊரில் கேஎப்சி நிறுவனத்திற்கு வேலைக்கு ஆள் எடுத்தார்கள். ஜாக் மா உள்பட 24 பேர் கலந்து கொண்டனர். அதில் ஜாக் மா நிராகரிக்கப்பட்டு மற்ற 23 பேரை வேலைக்கு எடுத்துக் கொண்டனர். சிறிதும் மனம் தளராமல் தனது அடுத்த முயற்சியை எடுத்தார்.
1996 ஆம் ஆண்டு நண்பர்களுடன் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு இணையதளம் பற்றி தெரிந்து கொண்டார். இன்டர்நெட்டில் ஜாக் மா தேடிய முதல் வார்த்தை பீர்.
பீர் என்று டைப் செய்ததும் சீனாவை தவிர எல்லா நாட்டு பீர்களும் வந்தன. பிறகு தனது நண்பர்கள் மூலம் 20 ஆயிரம் டாலரை சேர்த்து இணையம் சார்ந்த நிறுவனத்தை தொடங்கினார். அதன்பிறகு மூன்று வருடங்களில் ஜாக் மா 8,00,000 டாலர்களை சம்பாதித்துக் காட்டினார்.
1999 ஆம் ஆண்டு அலிபாபா நிறுவனம் துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் 17 பேர் மட்டுமே இந்த குழுவில் இருந்தனர். அலிபாபா நிறுவனம் ஆரம்பத்திலிருந்தே சீன வர்த்தகத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.
கடந்த 2000ம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் 25 மில்லியன் டாலர் முதலீட்டை பெற்றது. அமெரிக்க பங்குச் சந்தையில் 12% நிறுவன பங்குகளை மட்டுமே பங்கு சந்தையில் விட்டார். அதனை வெளியிட்ட முதல் நாளிலே பங்கின் மதிப்பு உயர்ந்தது.
2014 ஆம் ஆண்டின் அமெரிக்க பங்குச்சந்தையில் அலிபாபா நிறுவனத்தின் மொத்த மதிப்பு 25 பில்லியன் டாலர் ஆகும். இன்று உலகத்திலேயே பங்குச் சந்தையில் அதிக மூலதனம் திரட்டிய நிறுவனம் என்றால் அது அலிபாபா நிறுவனம் தான். இதன் பிறகுதான் அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மாவின் புகழ் உலகம் முழுவதும் பரவியது.
எவ்வளவு சோதனைகள் வந்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தால், வாழ்வில் வெற்றி பெறலாம் என்பதற்கு ஜாக் மா மிகப்பெரிய எடுத்துக்காட்டு.