ஊர் : நாச்சியார்கோயில்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
மூலவர் : திருநறையூர் நம்பி
தாயார் : வஞ்சுளவல்லி
ஸ்தலவிருட்சம் : மகிழம்
தீர்த்தம் : மணிமுத்தா,சங்கர்ஷணம், பிரத்யும்னம் அநிருத்தம்,சாம்பதீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள் : மார்கழி,பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்,இவ்விழாவின் போது கருடசேவை உற்சவம் நடக்கிறது.
திறக்கும் நேரம் : காலை 7:30மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி கொண்டு இருந்த மேதாவி எனும் மகரிஷி பெருமாளையே தனது மருமகனாக பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இங்கு வந்து வஞ்சுள மரத்தின் கீழ் தவமிருந்தார். அவரின் பக்தியை கண்டு மகிழ்ந்த லட்சுமி ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் வஞ்சுள மரத்தின்கீழ் சிறுமியாக அவதரித்தாள். சிறுமியைக் கண்ட மகரிஷி அவருக்கு வஞ்சுளா தேவி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். பருவப் பெண்ணான அவள் தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார்.
லட்சுமி திருமணம் செய்வதற்காக பெருமாள் சங்கர்ஷணன், பிரத்யும்னன், அணிருதன், புருஷோத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளைத் தேடி வந்தார். இவர் ஐவரும் ஆளுக்கொரு திசையாக சென்று தேடினர். அவருடன் வந்த கருடாழ்வார் இத்தளத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரை கண்டு மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்குமிடத்தைக் கூறினார். இங்கு வந்து தேவியை பெண் கேட்டார். மேதாவி மகாவிஷ்ணுவிடம் தாங்கள் தன் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்பினால் எப்போதும் நீங்கள் அவர் சொல்கேட்டு தான் நடக்க வேண்டும். அவளே அனைத்திலும் பிரதானமாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். பெருமாளும் ஏற்றுக்கொண்டார்.
கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது பெருமாள் கருடாழ்வாரிடம் நான் இங்கே என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே நீயே இங்கிருந்து நான் பக்தருக்கு அருள் வதைப் போல நீ அருள் வழங்க வேண்டும் என்றார். கருடாழ்வாரும் ஏற்றுக் கொண்டார். எனவே இவர் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகவும் இடம்பிடித்தார். தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில் என்று பெயர் பெற்றது.
பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இது 14 வது திவ்ய தேசம். நீலன் எனும் குறுநில மன்னனாக இருந்த திருமங்கை ஆழ்வார் பெருமாள் மீது பக்தி கொண்டு, தான் வைத்திருந்த பணத்தை எல்லாம் இறை பணிக்கே செலவிட்டார். அவர் வைணவர் அல்லாததால் யாரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மனம் கலங்கிய அவர், இங்கு வந்து பெருமாளிடம் வேண்டினார். அவருக்காக மனம் இரங்கிய பெருமாள் ஆச்சாரியனாக வந்து”முத்ராதானம்’ செய்து வைத்தார். ஆச்சார்யனாக வந்ததால் இத்தலத்து பெருமாள் இரண்டு கைகளுடன் இருக்கிறார்.
கையில் சங்கும் சக்கரமும் வதம் செய்த கோலத்தில் முன்புறம் தள்ளியும் சங்கு திரும்பிய நிலையில் இருக்கிறது. 100 பாசுரங்களுக்கு மேல் பதிகங்கள் பாடி சுவாமியை” நம்பி ‘என்று சொல்லி மங்களாசாசனம் செய்தார்.” நம்பி ‘என்றால் பரிபூரண நற்குணங்களால் நிறைய பெற்றவர் என்று பொருள். ஸ்ரீ ரங்கம் கோயில் “ஆண்டாள்’ பெயர் பெற்றது போல் இத்தலமும் தாயாரால் பெயர் பெற்றிருக்கிறது. இங்கு தாயாருக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
இங்குள்ள உற்சவர் தாயார் கையில் கிளியை ஏந்தி இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறார். இவள் தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்தும் விதமாக இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு கருட சேவையின் போது கற்சிலையாக இருக்கும் மூலவரே வீதியுலா செல்கிறார்.
கோச்செங்கணர் எனும் சோழ மன்னர் சிவன் மீது கொண்டிருந்த பக்தியால் நாயன்மார்களில் ஒருவராக இடம் பிடித்தவர். இவருக்கு வைகுண்டம் செல்ல ஆசை ஏற்பட்டது. எனவே அவர் பெருமாளை வேண்டினார். அவருக்கு இரண்டு கரங்களுடன் காட்சி தந்த பெருமாள். தனக்கு கோயில் கட்டும்படி கட்டளையிட்டார். அவருக்காக இத்தலத்தில் சிவன் கோயில் அமைப்பில் யாளிகளுடன் ,கோபுரத்தில் அருகில் இருந்து பார்த்தாலும் சுவாமி தெரியும்படி மாடக்கோயில் போல் இக்கோயிலை கட்டினான் சோழ மன்னன்.