ஊர் : நாதன்கோயில்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு.
மூலவர் : ஜெகநாதன்
தாயார் : செண்பக வல்லி
ஸ்தலவிருட்சம் : செண்பக மரம்
தீர்த்தம் : நந்தி புஷ்கரிணி
சிறப்பு திருவிழாக்கள் : வைகுண்ட ஏகாதசி
திறக்கும் நேரம் : காலை 8:00 மணி முதல் 12:00மணி வரை, மாலை 5:00மணி முதல் இரவு 8:00மணி வரை.
மகாலட்சுமி எப்போதும் திருமாலின் பாதத்தின் அருகே திருப்பாற்கடலில் சேவை செய்து வந்தார். அவருக்கு வெகு நாட்களாக திருமாலின் திருமார்பில் இடம் பிடிக்க ஆசை இருந்தது. எனவே செண்பக ஆரண்யம் என்ற இடத்தில் வந்து தவம் செய்தாள். திருமகளின் பிரிவை தாங்காமல் திருமால் ஐப்பசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் திருமகளை தன் திருமார்பில் ஏற்றுக்கொண்டார். ஆகவே ஐப்பசி வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள தாயாருக்கு அபிஷேகங்கள் நடைபெறுகிறது.
பக்தர்களின்வேண்டுதலும் விரைவில் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 21 வது திவ்ய தேசம். சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில் மூலஸ்தான கோபுரத்தில் நந்தியும், பிரம்மனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் சிறந்த பலன் உண்டு என்று நம்பப்படுகிறது.
ஒரு சமயம் நந்திதேவர் வைகுண்டத்தில் பெருமாளை காணச்சென்றார். அப்போது காவலுக்கு நின்றவர்களை ஏளனப் பார்வையிட்டு கேட்காமல் உள்ளே செல்ல முயன்றதால் அவர்கள் கோபம் கொண்டு எங்களை அவமதித்ததால் உன் உடம்பு உஷ்ணத்தால் எரியும் என சாபமிட்டனர். சிவனிடம் நடந்த விஷயத்தை கூறினார் நந்தி. அதற்கு சிவன் பூமியில் திருமகள் தவம் செய்து கொண்டிருக்கும் செண்பகாரண்ய தளத்திற்கு நீயும் சென்று தவம் செய்து சாபவிமோசனம் பெறுவாய் என்றார். நந்தியும் அவ்வாறே தவம் செய்தது. மகிழ்ந்த பெருமாள் அவருக்கு சாப விமோசனம் தந்தார்.
தன்னைப் பார்க்கும் ஆர்வத்தில் தவறு செய்த நந்தியின் பெயரால் “நந்திபுர விண்ணகரம்’ என இத்தலம் வழங்கப்படும் என்று அருள்பாலித்தார். இத்தல பெருமாள் தன் கையில் வாள், வில் ,சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் காட்சி கொடுக்கிறார். புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி சக்கரவர்த்தியின் தியாக உணர்வை காண்பதற்காகவும் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார் என்று தலபுராணம் கூறுகிறது. விஜயரங்க சொக்கப்ப நாயக்க மன்னர் தீராத நோயால் சிரமப்படும் தன் தாயார் விரைவில் குணமாக இத்தளத்தில் வேண்டினார்.
பெருமாளின் அருளால் தன் தாயார் குணமானவுடன் ,அனைத்து விதமான நகைகளையும் கொடுத்து பல அரிய திருப்பணிகள் செய்தார். கிழக்கு நோக்கி தவம் செய்த திருமகளை திருமால் ஏற்றதால் இத்தல பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்குள்ள பெருமாளின் திருநாமம் ஜெகநாதன் என்பதால் ,இவ்வூர் “நாதன்’ கோயில் என்று அழைக்கப்படுகிறது.