ஊர்: திருநகரி
மாவட்டம்: நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு.
மூலவர் : வேதராஜன்
தாயார் : அமிர்தவல்லி
தீர்த்தம்: இலாக்ஷ புஷ்கரிணி
சிறப்பு திருவிழாக்கள்: வைகாசி சுவாதி 10 நாள் திருவிழா, ஆவணி பவித்ர உற்சவம், தை 12 கருட சேவை, பங்குனி உத்திரம், மாத சுவாதி, பிரதோஷம்
திறக்கும் நேரம்: காலை 7:30 மணி முதல் 11:30 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை.
தலவரலாறு
திருவாலி – திருநகரி வரலாற்றிற்கு ஒரே வரலாறாக உள்ளது. பெருமாள், லட்சுமியை இத்தலத்தில் வந்து ஆலிங்கனம் செய்துள்ளார். திருவாலியிலும் இதேபோல் ஆலிங்கனம் கோலத்தில் இருப்பதால் இரண்டும் சேர்த்து திருவாலி – திருநகரி ஆனது. பிரம்மனின் மகனான கர்த்தம பிரஜாபதி பெருமாளிடம் மோட்சம் வேண்டி கடும் தவம் புரிந்தான். அவனுக்கு தரிசனம் கிடைக்கவில்லை. தரிசனம் தருவதற்கு பெருமாள் தாமதம் செய்தார். பிறகு திரேதாயுகத்தில் பிரஜாபதி உபரிசிரவஸு மன்னனாக பிறந்தான். அடுத்த யுகத்தில் சங்கபாலன் என்ற பெயரில் ஒரு மன்னனின் மந்திரியாக பிறந்தான்.
அப்பிறவியில் தனக்கு மோட்சம் வேண்டியபோது, கலியுகத்தில் கிடைக்கும் என பெருமாள் அருளினார். கலியுகத்தில் நீலன் என்ற பெயரில் ஒரு படைத்தலைவன் மகனாக பிறந்தான். இவன் ‘திருவாலியில்’ குமுதவல்லி நாச்சியார் என்ற பெண்ணை திருமணம் செய்ய விரும்பினான். ஆனால் குமுதவல்லி ஓராண்டிற்கு தினமும் ஆயிரம் வைணவர்களுக்கு அன்னதானம் செய்தால், திருமணம் செய்வதாக கூறினாள். அவ்வாறே செய்தான் நீலன். அவனிடம் பொருளும் தீர்ந்து வறுமை வந்தது. ஆகவே வழிப்பறியில் ஈடுபட்ட வேளையில், பெருமாள் லட்சுமியை திருமணம் செய்து திருவாலி வழியே தேவராஜபுரம் வந்தபோது நீலன் பெருமாளை மறித்து வழிப்பறி நடத்த, இறைவன் நீலனின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டான்.
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 35 வது திவ்ய தேசம். திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் திருமங்கை ஆழ்வார் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இத்தலத்தில் இரண்டு கொடிமரங்கள் உள்ளன. ஒன்று பெருமாளுக்கு எதிரே மற்றொன்று திருமங்கை ஆழ்வாருக்கு எதிரே உள்ளது.