ஊர் -திருக்கடித்தானம்
மாவட்டம் -கோட்டயம்
மாநிலம் -கேரளா
மூலவர் -அற்புத நாராயணன்
தாயார் -கற்பகவல்லி நாச்சியார்
தீர்த்தம் -பூமி தீர்த்தம்
திருவிழா -திருக்கார்த்திகையில் பத்து நாள் திருவிழா, கோகுலாஷ்டமி மற்றும் பெருமாளுக்கு உரிய விசேஷங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திறக்கும் நேரம் -காலை 5 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 வரை .
தல வரலாறு ;
ருக்மாங்கதன் என்ற மன்னன் சூரிய வம்சத்தை சேர்ந்த இவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். வேறு எங்கும் இல்லாத அற்புத மலர்கள் மன்னனின் நந்தவனத்தில் பூத்து குலுங்கின.
அப்போது தேவர்கள் அதைக்கண்ட அந்த மலர்களை பறித்து பெருமாளுக்கு அணிவித்தனர். இப்படியாக தினமும் மலர்கள் காணாமல் போவதை காவலர்கள் மன்னரிடம் தெரிவித்தனர். மன்னரும், பூக்களைத் திருடுபவர்களை கைது செய்யும்படி ஆணையிட்டார்.
காவலர்களும், தேவர்கள் என அறியாமல் அவர்களை கைது செய்தனர். கைது செய்தது தேவர்களை என அறிந்ததும் மன்னர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டார். மனிதர்கள் கைது செய்ததால் தேவர்களின் சக்திகள் அனைத்தும் இழந்து வானுலகம் செல்ல முடியாமல் போனது.
இதற்கு என்ன வழி என்று ‘தேவர்களிடம்’ மன்னன் கேட்டபோது. அதற்கு நீ ஆண்டுதோறும் இருக்கும் ஏகாதசி விரத பலனை எங்களுக்கு தானமாக கொடுத்தால் நாங்கள் வானுலகம் சென்றடையலாம் என்றனர். உடனே மன்னன் இத்தலத்திலுள்ள பெருமாள் முன்னிலையில் தனது ஏகாதசி விரத பலனை தேவர்களுக்கு தானமாகக் கொடுத்தான்.
தேவர்களும் வானுலகம் சென்றனர். இவை அனைத்தும் ஒரு கடிகை நேரத்தில் இத்தலத்தில் நடந்ததால் “திருக்கடித்தானம்’ என பெயர் பெற்றது.
108 வைணவத் தலங்களில் “கடி என்று சொல்லைக்கொண்டு மூன்று தலங்கள் உள்ளன. அவை திருக்கடிகை என்ற சோளிங்கபுரம், வடநாட்டில் உள்ள கண்டமென்னும் கடிநகர், கேரளாவில் திருக்கடித்தானம்.
ஒரு கணப் பொழுதில் தூய்மையான மனதுடன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தால் எடுத்த காரியத்தில் வெற்றியும், முன்னேற்றமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தல பெருமாள் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாகவும், கலியுக முடிவில் ஒளியாக மாறி விண்ணில் கலந்து விடும் என்றும் கூறுகிறார்கள்.
இத்தலத்து பிரம்மாண்டமான கோட்டை சுவர்கள் பூதங்களால் கட்டப்பட்டது என கூறுவர். கோயிலின் முன் ஒரு மனிதனின் உடல் ஒரு கல்லின் மேல் வைக்கப்பட்ட நிலையில் இருக்கும். அதற்கு ஒரு புராணக் கதை உள்ளது.
இப்பகுதியை ஆண்ட ராஜா சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அவர் வந்தபோது நடை சாத்தப்பட்டு இருந்தது. ஆனால் கோயில் மெய்க்காப்பாளர் ராஜாவிடம் பணம் வாங்கிக்கொண்டு கோயில் நடையை திறந்து விட்டான்.
இதன் தண்டனையாக தான் அந்த மெய்க்காப்பாளரின் உடல் கோவில் வாசல் முன் வைக்கப்பட்டுள்ளது என்கின்றனர். வட்டவடிவமான ஒரே கர்ப்பகிரகத்தில் பெருமாள் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். எனவே இருவருக்கும் தனித்தனியே இரண்டு கொடிமரங்கள் உள்ளன.