ஊர் -திருப்புலியூர்
மாவட்டம் -ஆலப்புழா
மாநிலம் -கேரளா
மூலவர் -மாயப்பிரான்
தாயார் -பொற்கொடி நாச்சியார்
தீர்த்தம் -பிரக்ஞாசரஸ் தீர்த்தம்
திருவிழா -மார்கழி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேற்றம், பத்தாம் நாள் ஆராட்டு நடைபெறுகிறது. தை மாதம் முதல் தேதியில் காவடியாட்டம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திறக்கும் நேரம் -காலை 5 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை .
தல வரலாறு;
சிபி சக்கரவர்த்தியின் மகனான விருஷாதர்பி என்பவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அவன் ஏதோ ஒரு சாபத்தினால் கடுமையான நோய் ஏற்பட்டது. அத்துடன் அவனது நாட்டில் கொடிய வறுமையும் உண்டாயிற்று.
அப்போது சப்தரிஷிகள் அவனது நாட்டிற்கு வருகை புரிந்தனர். அவர்களிடம் மன்னன் தனக்கும் தன் நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பெரிய ஆபத்தை போக்கினால் தான், தானம் ஏதும் கொடுப்பதாக கூறினான். தானம் என்ற சொல்லைக் கேட்டவுடன் ரிஷிகளுக்கு கோபம் வந்தது. உன் போன்ற மன்னர்களிடம் தானம் பெருவது மிகப்பெரிய பாவமாகும் என மறுத்து விட்டனர்.
இருந்தும் மன்னன், ரிஷிகளுக்கு கொடுப்பதற்காக அவரது மந்திரிகள் மூலம் தங்கத்தையும் பழங்களையும் அனுப்பி வைத்தான் இதையும் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த செயலால் மன்னன் கோபமடைந்து மாபெரும் யாகம் ஒன்றை நடத்தி அதில் தோன்றிய தேவதையை ரிஷிகளை கொல்வதற்காக அனுப்பி வைத்தான்.
இதை அறிந்த ரிஷிகள் தங்களை காக்கும்படி பெருமாளிடம் வேண்டினார். இவர்களது வேண்டுதலை ஏற்ற பெருமாள், இந்திரனை புலியாக மாறும்படி செய்தார், புலி தேவதையை கொன்றது. இதனால் இத்தலம் “திருப்புலியூர்’ என பெயர் பெற்றது.
ரிஷிகள் அனைவரும் பெருமாள் ஒருவரே பரம்பொருள் மற்ற அனைத்தும் மாயை என நினைத்து வழிபாடு செய்தனர். இதனால் பெருமாள் இவர்களுக்கு மாயப்பிரான் ஆக காட்சியளித்தார்.
இத்தல பெருமாள் பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்குள்ள மிகப்பெரிய “கதாயுதம்’ பீமன் உபயோகித்ததாக கூறுகின்றனர். நம்மாழ்வார் காலத்தில், இப்பகுதியில் ஒரு பெரிய நகரம் இருந்ததாக அவரது பாடலின் மூலம் அறியப்படுகிறது. இத்தலத்தை இப்பகுதி மக்கள்” குட்டநாடு திருப்பூர் ‘என்று அழைக்கின்றனர்.