திருவாழ்மார்பன் கோவில் வரலாறு

ஊர் – திருப்பதிசாரம்

மாவட்டம் – கன்னியாகுமரி

மாநிலம் – தமிழ்நாடு

மூலவர் – திருவாழ்மார்பன்

தாயார் – ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசன்

தீர்த்தம் – லட்சுமி தீர்த்தம் என்ற புஷ்கரிணி

திருவிழா – பெருமாள் குலசேகர ஆழ்வாரை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்ற ஆடி சுவாதி திருநாள், சித்திரையில் 10 நாள் திருவிழா, புரட்டாசி சனி, ஆவணி திருவோணம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இவருக்கு மட்டுமே ஊஞ்சல் சேவை நடக்கிறது.

திறக்கும் நேரம் – காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

தல வரலாறு;

முற்காலத்தில் ஞானாரண்யம் என அழைக்கப்பட்ட சுசீந்திரத்தில் சப்தரிஷிகள் தவமிருந்தனர், இறைவன் சிவ வடிவில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். இருந்தும் முனிவர்கள் இறைவனை, திருமாலின் உருவிலே காண சோம தீர்த்தக் கட்டம் என்ற இடத்தில் தவம் புரிந்தனர்.

அவர்களது தவத்திற்கு மகிழ்ந்து, திருமால் உருவில் காட்சி கொடுத்தார் இறைவன். இத்தலத்தில் தங்கி பக்தர்களுக்கு காட்சி தந்தருள வேண்டும் என முனிவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். எனவே திருமால் சப்தரிஷிகள் சூழ பிரசன்ன மூர்த்தியாக சுமர்ந்து அருள்புரிகின்றார்.

பெருமாளின் அம்சமான நம்மாழ்வாரின் தாய் இத்தலத்தில் பிறந்தார். குறுநாட்டு காரிமாறன் என்ற சிற்றரசனுக்கும் நாஞ்சில்நாட்டு திருப்பதிசாரத்தில் இருந்து திருவாழிமார்ப பிள்ளை மகளான உதய நங்கைக்கும் மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது.

பல ஆண்டுகள் கழிந்தும் பிள்ளைப்பேறு இல்லை என வருந்தி தம்பதிகள் மகேந்திரகிரி அடிவாரத்திலுள்ள திருக்குறுங்குடி சென்று, அதன் வழியே ஓடும் நதியில் நீராடி அங்குள்ள நம்பியிடம் பிள்ளை வரம் வேண்டி நின்றனர்.

பெருமாளும் அவருக்கு காட்சி கொடுத்து யாமே உனக்கு மகனாக பிறந்து 16 வயதிலே அனைத்து விதமான கீர்த்திகளையும் பெற்று உங்களுக்கு புகழ் தேடித் தருவேன், பிறக்கும் குழந்தையை திருநகரில் உள்ள புளியமரத்தடி எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கூறி மறைந்தார்.

பின் சில நாட்களிலேயே உதய நங்கை கருவுற்றாள், தமிழர் முறைப்படி மகப்பேறுக்காக தாய் வீடான திருவண்பரிசாரம் அனுப்பப்பட்டால். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பௌர்ணமி திதியில் நம்மாழ்வார் பிறந்தார்.

குறுங்குடிப் பெருமாளின் ஆணைப்படி குழந்தையை திருநகரியில் உள்ள புளிய மரத்துக்கு பொற்தொட்டிலில் இட்டு எடுத்து வந்தனர். அக்குழந்தை தவழ்ந்து தவழ்ந்து புளியமரப் பொந்தினுள் ஏரி தெற்கு நோக்கி பத்மாசனத்தில் ஞானமுத்திரை ஏந்தியவராய் அங்குள்ள ஆதிநாராயணரை தியானித்து நின்றது.

இந்நிகழ்ச்சியைக் பார்த்த அனைவரும் வியந்து போயினர். 16 ஆண்டுகள் இந்த பாலமுனி, இறை தியானத்திலே இருந்தார். இவ்வாறு திருப்பதிசாரம் நம்மாழ்வாரின் அவதார தல மாகவும், ஆழ்வார்திருநகரி அவர் ஞானம் பெற்ற தலமாகவும் விளங்குகின்றது.

மூலவரான திருவாழ்மார்பன் நான்கு கைகளுடன் சங்கு, சக்கரம் ஏந்தி அபய ஹஸ்தத்துடன், அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கிறார். ஒன்பது அடி உயரமுள்ள இச்சிலை “கடு சர்க்கரை யோகம்’ என்ற கூட்டினால் சமைக்கப்பட்டது.

கல்லும் ,சுண்ணாம்பும் சேர்த்து செய்யப்பட்ட உருவத்தின் மேல் கடுகும் சர்க்கரையும் சேர்த்து ஒருவித பசையினால் பூசப்படும் முறைக்கு கடுசர்க்கரை யோகம் என்பர். எனவே மூலவருக்கு அபிஷேகம் கிடையாது உற்சவருக்கு மட்டுமே.

இங்கு தாயாருக்கு என்று தனி சன்னதி கிடையாது. லட்சுமி தாயார் மூலவரின் நெஞ்சிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஐதிகம். பெருமாள் லட்சுமியின் உருவம் பொறித்த பதக்கத்துடன் தங்க மாலை ஒன்றை அணிந்துள்ளார்.

Recent Post

RELATED POST