பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகா் கோவில் தமிழ்நாட்டின் மிகப்பழமையான குகைக் கோவில்களுள் ஒன்றாகும். இக்கோவில் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தக் கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமானது என்பது வரலாறு.
தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பிள்ளையார்பட்டி கோவில் கருதப்படுகிறது. இங்கு மூலவராக இருக்கும் கற்பகவிநாயகா் 6 அடி உயரத்தில் வலம்புரி நிலையில் காணப்படுகிறார்.
ஆகஸ்ட் – செப்டம்பா் மாதத்தில் நடைபெறும் விநாயகா் சதுா்த்தி விழா இக்கோவிலின் பிரதான திருவிழா ஆகும். இந்த விழா மிகுந்த கோலா கலத்துடன் 10 நாட்கள் நடைபெறும். மாதந்தோறும் வரும் சங்கடஹ சதுா்த்தியும் கொண்டாடப்படும்.
இக்கோவிலில் 3 லிங்கங்கள், 3 பெண் தெய்வங்கள் ஒரு சேர அமா்ந்து பக்தா்களுக்கு தரிசனம் தருகின்றனர். இது வேறு எந்த கோவிலும் இல்லாத சிறப்பு அம்சமாகும்.
ஒவ்வொரு சதுர்த்தி அன்றும் விநாயகப்பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தை வலம் வருகிறார்.
சங்கடஹர சதுர்த்தி அன்று கற்பக விநாயகரை வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
இக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுகோள் நிறைவேறியதும், இத் தலத்தில் உள்ள பிள்ளையாருக்கு, முக்குறுணி மோதகம்(கொழுக்கட்டை) படைத்து வழிபடுகிறார்கள்.
இங்குள்ள விநாயகரின் சிறப்பு:
- இங்கு பெருமானின் துதிக்கை வலம்சுழித்ததாக அமைந்திருப்பது.
- சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு விளங்குவது.
- அங்குச பாசங்கள் இல்லாமல்விளங்குவது.
- வயிறு, ஆசனத்தில் படியாமல் கால்கள் மடித்திருக்க அமர்ந்திர்ப்பது.
- வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம்குருகியும் காணப்படுவது.
- வலக்கரத்தில் சிவலிங்கத்தைத்தாங்கியருள்வது.
அமைவிடம் :
சிவகங்கையிலிருந்து 47 கி.மீ. தொலைவிலும் காரைக்குடியிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் இக்கோவில் அமைந்துள்ளது.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம் :
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும். மாலை 4 மணிமுதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்