விருக்ஷா மாதா என்று கர்நாடக மக்களால் பெரும் மதிப்புடன் அழைக்கப்படும் துளசி கவுடா அவர்களுக்கு சமீபத்தில் இந்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கி இருக்கிறது. துளசி அஜ்ஜி அதாவது அஜ்ஜி என்றால் கன்னடத்தில் பாட்டி என்று அர்த்தம். கர்நாடகாவின் அங்கோலா தாலுகாவில் உள்ள ஹலக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.
கடந்த 50 ஆண்டுகளாக கர்நாடகாவில் உள்ள 4 தாலுகாக்கள் மற்றும் 5 புலிகள் காப்பகங்களில் காடுகளை வளர்த்ததற்காக காடுகளின் தாய் என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறார். அவர் கர்நாடக வனத்துறையில் தினசரி கூலியாக வேலை செய்தார்.
சுற்று சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஐ விட பல மடங்கு மேலானவர் நம்ம பாட்டி பத்மஶ்ரீ துளசி கவுடா.
ஏனென்றால் “ஹவ் டேர் யூ” என்று எல்லா மாநாடுகளிலும் குரல் மட்டுமே எழுப்புவதற்கு பதிலாக தனது செயல்பாடுகள் மூலமாக நிஜமாகவே உலகை மாற்றத் துணிந்தார் பத்மஶ்ரீ துளசி கவுடா, மேலும் இவர் தனது வாழ்நாளில் 100,000 மரங்களை நட்டுள்ளார்
வனத்துறை காடு வளர்ப்புத் திட்டத்தைத் தொடங்க விரும்பியபோது மரக்கன்றுகள் வளராமல் அழிந்து போனதால் அவற்றை வளர்க்க முடியவில்லை. இதற்கு கவுடா உதவினார்.
90 சதவீதத்திற்கும் அதிகமான இந்திய பூர்வீக மரங்களை மீண்டும் உருவாக்குவதில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. கவுடாவால் காடுகளில் எந்த இனத்தின் தாய் மரத்தையும் அடையாளம் காண முடியும். அப்படி ஒரு அபரிவிதமான திறமை அவர்களுக்கு உண்டு.
தாய் மரத்திலிருந்து வரும் விதைகளைக் கொண்டு மறைந்துபோன மரங்களை மீளுருவாக்கம் சிறப்பாக செய்யப்படுகிறது. உதாரணமாக, ஹோபியா பர்விஃப்ளோரா, கன்னடத்தில் போகி மாரா என்ற அழைப்பார்கள், இப்படி ஒரு தாவரத்தின் தாய் மரத்திலிருந்து அதன் பூக்கும், முளைக்கும் நேரம் மற்றும் விதைகளை சேகரிக்க சிறந்த நேரம் எது என்று கவுடாவிற்கு தெரியும்.
காடு மற்றும் மரங்களின் மொழி மற்றும் முளைப்பு, பூக்கள் போன்ற நுட்பங்களைப் பற்றிய அவரது புரிதல் பிரமிப்பூட்டுகிறது.
துளசி கவுடாவின் காடு பற்றிய அறிவு காடுகளின் வளர்ச்சிக்கு உதவும் என்று ஒரு வன அதிகாரி அடையாளம் காட்டினார்.
காடுகளில் விதைகள் மற்றும் மரக்கன்றுகள் உயிர்வாழ அதிக வாய்ப்புள்ள மரங்களின் தாய் மரத்தை அடையாளம் காண்பதில் அவர் நிபுணத்துவம் பெற்றவர்.
துளசி கவுடாவிற்கு படிப்பறிவு ஒன்றும் பெரிதாக இல்லை, ஆனால் எப்படி இதை பற்றி எல்லாம் தெரியும் என்று யாருக்கும் தெரியாது.
அவரது பழங்குடி மக்களுக்கு அது தெரியும் என்று சிலர் கூறுகிறார்கள், மேலும் சிலர் அவர் ஒரு வன தெய்வம் என்றே கூறுகிறார்கள்
மேலும் அவரால் 300 க்கும் மேற்பட்ட மருத்துவ தாவரங்களை அடையாளம் காண முடியும். ஹாலக்கி பழங்குடியினர் மருத்துவ தாவரங்கள் பற்றிய அறிவிற்காக பெரிய அளவில் அறியப்படுகிறார்கள், அவர்கள் பெரும்பாலும் அவற்றை நோய்களைக் குணப்படுத்துவதை விட நோய்களைத் தடுக்கப் பயன்படுத்துகிறார்கள். இவை தலைமுறைகளாகக் கடந்து வந்த அறிவு மற்றும் பாரம்பரியமாகும்
துளசி அதை பாதுகாத்து வைத்திருப்பவர், இந்த அறிவைக் கொண்டு காடு வளர்ப்பு முயற்சிகளுக்கு உதவியதோடு ஒரு பெரிய காடு வளரவும் உதவியுள்ளார்.
துளசி கவுடா போல வெளியே தெரியாத எத்தனையோ பழங்குடி மக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் தங்களது செயல்கள் மூலமாக இயற்கையை, காடுகளை பாதுகாத்து வருகின்றனர்.