உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் வேலைப்பளு, நேரமின்மை போன்ற காரணங்களால் உடல் எடையை குறைப்பதில் கவனம் குறைந்து விடுகிறது. ஜிம்முக்கு சென்று உடலை குறைப்பதற்கு நேரமும் இல்லாமல் போகிறது.
அருகிலுள்ள நண்பர் வீட்டிற்கோ அல்லது கடைகளுக்கோ செல்லும் போது, நடந்து செல்லுங்கள். இதனால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஒன்றாவது மாடி இரண்டாவது மாடிக்கு செல்வதற்கு கூட லிப்ட் பயன்படுத்துவோர் தற்போது அதிகம் உள்ளார்கள். அந்த சூழ்நிலையில் லிப்டை தவிர்த்து படிக்கட்டில் செல்லுங்கள்.உடல் எடையை குறைப்பதற்கும் இது உதவும்.
சிலர் உடல் எடையை குறைப்பதற்காக சாப்பாட்டின் அளவைக் குறைப்பார்கள். இது மிகவும் தவறான செயல். சாப்பாட்டின் அளவை குறைத்தால் உடலுக்குத் தேவையான சக்தி குறைந்து சோர்வாக இருப்பீர்கள். நம்முடைய உணவு பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டாலே போதும். உடல் எடை தானாக குறைந்து விடும். அதை எப்படி செய்வது என்பதை பற்றி இதில் கூறப்பட்டுள்ளது.
தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன், எலுமிச்சை சாறு கலந்து குடித்து வரலாம். இதனால் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும்.
கொள்ளு பருப்பில் அதிகளவு மாவுச் சத்து உள்ளதால் கொழுப்புத் தன்மை எனப்படும் தேவையற்ற சதையை குறைக்கும்.
தினசரி உணவில் ஓட்ஸ், சப்பாத்தி, பழங்கள், அதிக அளவு காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வயிற்றை நிரப்புவதோடு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும்.
முட்டைக்கோஸ், குடைமிளகாய், பாகற்காய், கேரட், முருங்கைக்காய், வாழைத்தண்டு போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
காலை மற்றும் இரவு நேரங்களில் காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிடுவது நல்லது.
பாஸ்ட் புட், எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், சிப்ஸ், பக்கோடா போன்ற நொறுக்குத் தீனி வகைகள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
அதிகமாக தண்ணீர் குடியுங்கள். இதனால் உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கும்.
சுரைக்காய், கொள்ளு பருப்பு, பூண்டு இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். தினமும் காலையில் டீ அல்லது காபி குடிக்கும் போது, அதில் சிறிதளவு பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் உடல் எடையை குறைக்கவும் இது பயன்படுகிறது.
சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள அதிகப்படியான சதைகள் குறையும்.
அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எலுமிச்சை சாறை கலந்து குடித்து வந்தால் விரைவில் உடல் எடை குறையும்.
கிரீன் டீ, இஞ்சி டீ குடிக்கலாம். 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு வாரத்திற்கு குடித்து வந்தால், உடல் எடை நிச்சயம் குறைந்துவிடும்.
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், அரை ஸ்பூன் லவங்கப் பொடி, ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் இரண்டே வாரத்தில் 5 கிலோ எடை குறைக்க முடியும்.
குளிர்ந்த நீரை குடிப்பதற்கு பதிலாக சூடான நீரை குடித்து வந்தால் உடல் எடை குறையும். பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறைவதை காணலாம்.
சுரைக்காயை வாரத்திற்கு ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது வயிற்று சதையை குறைக்க உதவும். உணவில் வெங்காயம், பூண்டு அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உணவில் காரம், உப்பு இவைகளை குறைத்துக்கொள்ள வேண்டும். நேரம் உள்ளவர்கள் யோகா, நடை பயிற்சி, உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் எடை குறைந்து உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பது உறுதி.