1941 ம் ஆண்டு நெல்லை மாவட்டம் வள்ளியூர் அடுத்த திருக்குறுங்குடியில் நம்பி நாராயணன் பிறந்தார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் பொறியியல் படித்தார்.
இஸ்ரோவில் 1966ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இஸ்ரோவில் அப்துல் கலாம் திடப்பொருட்களை எரிபொருளாக கொண்டு ராக்கெட் செலுத்துவது குறித்து ஆய்வு செய்த போது, நம்பி நாராயணன் திரவ எரிபொருட்கள் பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
திரவ எரிபொருள் தேவையை முன்கூட்டியே கணித்த நம்பி நாராயணன் 1970களின் தொடக்கத்தில் முதல் திரவ உந்து மோட்டாரை உருவாக்கினார்.
பிஎஸ்எல்வி-யின் இரண்டாம் மற்றும் நான்காம் நிலைகளின் திட்ட இயக்குநர், கிரையோஜெனிக் திட்ட இயக்குநர், பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி-யின் அசோசியேட் திட்ட இயக்குநர், திரவ எரிபொருள் புரோபல்ஷன் துணை திட்ட இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளின் கீழ் இஸ்ரோவில் பணியாற்றியுள்ளார்.
1994ஆம் ஆண்டு இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு ரகசியங்களை வெளிநாட்டு அதிகாரிகளுக்கு வழங்கியதாக நம்பி நாராயணன் மீது, புகார் எழுந்தது. இந்த வழக்கில் நம்பி நாராயணன் 50 நாட்கள் சிறையில் இருந்தார்.
பல சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு அவர் மீதான குற்றச்சாட்டை 1996ஆம் ஆண்டு சிபிஐ தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து 1998 ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் நம்பி நாராயணன் நிரபராதி எனத் தீர்ப்பளித்தது. ஆனாலும் அவரது ஓய்வு காலம் வரை பெரிய பொறுப்புகள் ஏதும் தரப்படாமலேயே கடந்த 2001-ல் இஸ்ரோவில் இருந்து நம்பி நாராயணன் ஓய்வு பெற்றார்.
மனித உரிமைகள் ஆணையம் சார்பில் பொய்யான வழக்குப்பதிந்த கேரள போலீஸ் மீதும் IB அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படியும், நம்பி நாராயணனுக்கு நேர்ந்த மன உளைச்சலுக்கு இழப்பீடு கொடுக்கவும் வழக்குத் தொடரப்பட்டது. பிறகு உச்சநீதிமன்றம் 2018ல் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக்கூறி கேரள அரசுக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து 2019-ம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்தது.
உலகம் போற்றிய ஆராய்ச்சியாளராகவும், குற்றம் சுமத்தப்பட்ட கைதியாகவும், புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் சமமாக பாவித்து உழைத்தவர் நம்பி நாராயணன்.