தூங்கும் போது, ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில் படுத்திருப்போம். இதனால் தான் வீட்டில் உள்ள பெரியவர்கள் குப்புற படுத்து தூங்கக்கூடாது என கூறுகிறார்கள். இருப்பினும், பலர் குப்புற படுத்து தூங்கும் பழக்கத்தில் உள்ளனர். இவ்வாறு தூங்குவதால் உடலில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
குப்புறப் படுத்து தூங்குவது முதுகு மற்றும் கழுத்துப் பகுதிகளில் அழுத்தத்தை உருவாக்குகிறது. இதனால், மறுநாள் காலையில் எழும்பும் போது, முதுகுவலி மற்றும் தசை பிடிப்பு போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம்.
குப்புறப் படுத்துத் தூங்குவது முதுகுத் தண்டின் ஆரோக்கியத்திற்கு தீமையாக இருக்கிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வயிற்றை அமுக்கி தூங்கும் போது, முதுகுத் தண்டு வளைந்து அதன் இயல்பான அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. இது முதுகுவலிக்கு வழிவகுக்கிறது.
குப்புறப் படுத்து தூங்கும்போது, மூச்சு விடுவதற்காக கழுத்தை ஒருபக்கம் திருப்பி வைத்திருப்பதால், கழுத்து வலி ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. மல்லாந்து அல்லது பக்கவாட்டில் தூங்குவது, ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குவதோடு, அசௌகரியங்களை குறைக்கவும் உதவுகிறது.