ஆவாரம் பூவில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. கிராமங்களில் ஆவாரம் பூவை பெருமளவு பயன்படுத்துகின்றனர். எந்த விதமான நிலத்திலும் வளரக்கூடிய அரிய மருத்துவ மூலிகை செடிதான் இந்த ஆவாரம் பூ மரம். இதன் விதை, வேர், இலை, அரும்பு, பட்டை, பூ என அனைத்தும் மருத்துவ பயன்கள் கொண்டவையாகும். செடியிலிருந்து எண்ணெய், கசாயம், சூரணங்கள் செய்து நாட்டு வைத்தியர்கள் மருந்தாக பயன்படுத்துகின்றனர்.
மூல நோய் உள்ளவர்கள், ஆவாரம் பூவை சுத்தம் செய்து, வெயிலில் உலர்த்தி அதோடு அருகம்புல் வேரையும் சேர்த்து பொடி செய்து, ஒரு சிறிய கரண்டி நெய்யுடன் கலந்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உள்மூலம், வெளிமூலம் குணமடையும்.
ஆவாரம் பூக்களில் பலவிதமான புழு பூச்சிகள் இருக்கும். ஆகவே அதை நன்றாக சுத்தம் செய்த பிறகு பயன்படுத்த வேண்டும்.
ஆவாரம் பூவை கஷாயம் செய்து சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும். ஆவாரம் பூவை உடல் மீது தேய்த்து வந்தால் சரும வியாதிகள் குணமடையும். வாரத்தில் இரண்டு நாட்கள் ஆவாரம் பூவை உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
காய்ச்சல் நேரத்தில் ஆவாரம் பூக்களை தண்ணீரில் போட்டு வேக வைத்து, அந்த தண்ணீரை பருகி வந்தால் காய்ச்சல் விரைவில் நீங்கும். மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆவாரம் பூக்களை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிறு குடல்களில் நிறைந்திருக்கும் நச்சுக்கள் முழுவதுமாக வெளியேறும். அதோடு வயிறு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகும்.
ஆவாரம் பூவில் கிருமிநாசினி தன்மை அதிகமாக உள்ளது. ஆவாரம் பூக்களை அரைத்து புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவில் ஆறும். மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அடிவயிற்றில் வலி ஏற்படும். அந்த நேரத்தில் ஆவாரம் பூக்களை கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால் அடிவயிற்றில் ஏற்படும் வலி குறையும். மேலும் கருப்பையில் இருக்கும் நச்சுக்களையும் இது நீக்கும்.