அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில் வரலாறு

ஊர் : ஆதனூர்

மாவட்டம் : தஞ்சாவூர்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : ஆண்டளக்கும் ஐயன்

தாயார் : பார்க்கவி

ஸ்தலவிருட்சம் : புண்ணை,பாடலி

தீர்த்தம் : சூரிய,சந்திர தீர்த்தம்

சிறப்பு திருவிழாக்கள் : வைகாசியில் 10 நாட்கள் பிரமோட்சவம்

திறக்கும் நேரம் : காலை 7:00மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

பாற்கடலில் மகாவிஷ்ணுவை பிருகு மகரிஷி தரிசனம் செய்தபோது லட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தார். அந்த மாலையை பிருகு, இந்திரனிடம் கொடுத்தார். இந்திரன் அம்மாலையை தன் யானையின் மீது வைக்க, அது காலில் போட்டு மிதித்தது. இதைக்கண்ட பிருகு கோபம் கொண்டு இந்திரனை பூலோகத்தில் சாதாரண மனிதராக பிறக்கும்படி சபித்தார்.

இந்திரன், செய்த தவறை மன்னிக்கும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினான். அப்போது மகாலட்சுமி தான் பூலோகத்தில் மகரிஷியின் மகளாக பிறந்து பெருமாளை திருமணம் செய்யும்போது சாபம் நீங்கப் பெறும் என்றார். அதன்படி மகரிஷியின் மகளாக பிறந்தாள். பெருமாள் இத்தளத்தில் அவளைத் திருமணம் செய்து கொண்டார். இந்திரன் பெருமாளையும் மகாலட்சுமியையும் வணங்கினான் .மகாவிஷ்ணு அவனுக்கு பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார்.

பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இது 11 வது திவ்ய தேசம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. இறைவன் பள்ளிகொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளை கொண்டது. கருவறை விமானத்தில் ஏழு பூதகணங்கள் மத்தியில் வடக்கு பார்த்தபடி மகாவிஷ்ணு சிலை ஒன்று உள்ளது. இந்த சிலை பல்லாண்டு காலமாக வளர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீ ரங்கநாதர் கோயிலை திருமங்கை ஆழ்வார் திருப்பணி செய்தபோது அவர் வைத்திருந்த செல்வம் அனைத்தும் செலவழிந்தது. பணியாட்களுக்கு கொடுக்கக்கூட பணம் அவரிடம் இல்லை
எனவே பெருமாளிடம் வேண்டி கொண்டார்.

அசரீரியாக ஒலித்த பெருமாள்,கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி பணம் தருவதாக சொன்னார். ஆழ்வாரும் அங்கு சென்றார், அப்போது வணிகர் ஒருவர் தலைப்பாகை அணிந்து கொண்டு கையில் மரக்கால், ஏடு மற்றும் எழுத்தாணியுடன் அங்கு வந்தார். அந்த வணிகரை கண்ட ஆழ்வார் நீங்கள் யார்? என்று வினவினார். அப்போது அந்த வணிக உங்களுக்கு உதவி செய்ய ரங்கநாதன் என்னை அனுப்பி வைத்தார். என்ன வேண்டுமோ கேளுங்கள் என்றார். திருமங்கை அவரிடம் பணம் கேட்டார். தன்னிடம் செல்வம் இல்லை என்பதை சொல்லிய வணிகர், தான் வைத்திருந்த மரக்காலை காட்டி, மரக்கால் கேட்டதைக் கொடுக்கும். ரங்கநாதரை வேண்டி உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்டால் கிடைக்கும் என்றார்.

திருமங்கையாழ்வார் பணியாளர்களுக்கு கூலி கொடுக்கவேண்டும் என்றார். அப்போது வணிகர் இந்த மரக்காலில் தன் பணியாளர்களுக்கு மணலை அளந்து தருவதாகவும், உண்மையாக உழைத்தவர்களுக்கு மட்டும் மணல் பொன்னாகும் ஏமாற்றியவர்களுக்கு அது மணல் ஆகவும் இருக்கும் என்றார். திருமங்கையும் ஒப்புக்கொள்ள, பலருக்கு மணல் ஆகவே இருந்தது. கோபம்கொண்ட பணியாளர்கள் வந்திருப்பவன் ஒரு மந்திரவாதி, தந்திரவாதி என எண்ணி அந்த வணிகரை அடிக்க துரத்தினர். வணிகர் அவர்களிடமிருந்து தப்பித்து ஓட, அவரை பின் தொடர்ந்து ஓடினார் திருமங்கையாழ்வார்.

நீண்ட தூரம் ஓடிவந்த வணிகர் இத்தலத்தில் நின்றார், அப்போது திருமங்கை ஆழ்வார் நீங்கள் யார்? எதற்காக எனக்கு உதவி செய்வதாக சொல்லி ஏமாற்றினீர்கள் என்றார். மகாவிஷ்ணு மனிதனாக வந்து அருளியது ,தானே என அவருக்கு உணர்த்தி காட்சி கொடுத்தார். ஏட்டில் எழுத்தாணியால் எழுதி அவருக்கு உபதேசமும் செய்தார்.

இத்தளத்தில் கருவரைக்கு முன் புறம் அர்த்தமண்டபத்தில் சுவாமியின் பாதம் ,தலைக்கு நேரே இரண்டு தூண்கள் உள்ளது .இரட்டைப்படை எண்ணிக்கையில் வலம் வந்து இந்தத் தூண்களை பிடித்து சுவாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.சுவாமிமலை அருகே திருஆதனூர் என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள பெருமாள் கையில் ஏட்டுச்சுவடி, எழுத்தாணியுடன் காணப்படுகிறார் இவர் கணக்கு எழுதும் பெருமாள், ஆண்டளக்கும் ஐயன் ,படியளக்கும் பரந்தாமன் என்ற பெயர் பெற்றுள்ளார்.

Recent Post