Appalam Good or Bad For Health : அப்பளங்கள் உடலுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்பதை தெரியாமல் நாம் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். மொறுமொறு சுவை கொண்ட அப்பளம் தென் இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது.
சாம்பார் சாதம், பருப்பு சாதம், ரசம் சாதம் ஆகியவற்றுடன் அப்பளம் சேர்த்து சாப்பிடுகிறோம். வெயிலில் காயவைக்கப்படும் அப்பளம் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்தது. இதனை எண்ணெயில் பொரித்து அல்லது சுட்டு சாப்பிடுகிறோம்.
அப்பளங்களை அளவோடு சாப்பிடும் போது, அவை உடலுக்கு நன்மை தரும். ஆனால், அளவுக்கு மீறினால், அப்பளமும் தீங்காக மாறும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அப்பளம் தயாரிப்பில் உப்பு ஒரு முக்கியமான கூறாக இருக்கிறது. அப்பளத்திற்கு சேர்க்கப்படும் குறிப்பிட்ட அளவிலான உப்பு, அதன் சுவையை மேம்படுத்துகிறது. ஆனால், உடலுக்கு தேவையான அளவுக்கு மிஞ்சிய உப்பு உட்கொள்வதால், இரத்தத்தில் உப்பின் அளவு அதிகரிக்கிறது. அப்பளத்தில் உள்ள உப்பு (சோடியம்) உடலில் இரத்த அழுத்தம், நீர் தேக்கம், வயிறு உப்புசம், தாகம் அதிகரிப்பு மற்றும் சர்க்கரை நோய்க்கு காரணமாக அமைகிறது.
சில அப்பளங்களை தொடர்ந்து சாப்பிடும் போது, அசிடிட்டி மற்றும் செரிமான சிக்கல்கள் உருவாகலாம். அப்பளம் பிடிக்கும் என்ற காரணத்தினால், பலர் ஒரே நேரத்தில் 4-5 அப்பளங்களை சாப்பிடுகிறாரகள். இது உடலுக்கு நல்லது அல்ல.
ஒரே எண்ணெயில் அப்பளங்களை பல முறை பொரித்தால், அது உடலுக்கு தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்து இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம்.
அப்பளங்களை தயாரிக்கும்போது, அவற்றை வெயிலில் வைக்க வேண்டும். இதனால் அவற்றின் தூய்மை குறித்த சந்தேகம் எழுகிறது. மேலும், சுகாதாரமற்ற இடங்களில் வைக்கப்பட்டால், சாப்பிடும் நபருக்கு தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.