கும்பகோணம் சாரங்கபாணி கோவில் வரலாறு

ஊர் : கும்பகோணம்

மாவட்டம் : தஞ்சாவூர்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : சாரங்கபாணி ,ஆராவமுதன்

தாயார் : கோமளவல்லி

தீர்த்தம் : ஹேமவல்லி ,புஷ்கரிணி, காவிரி, அரசலாறு

சிறப்பு திருவிழாக்கள் : சித்திரை திருவிழா ,தை மாதத்தில் சங்கரமண உற்சவம் ,வைகாசியில் வசந்த உற்சவம் ,மாசி மக தெப்பம் ,வைகுண்ட ஏகாதசி ஆகியவை முக்கிய விழாக்கள் ஆகும்

திறக்கும் நேரம் : காலை 7:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

ஒரு சமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் கால் வைக்க சென்றார். இதை திருமாலும் தடுக்கவில்லை. நான் உங்கள் மார்பில் இருப்பதை அறிந்தும் பிற புருஷனின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்கள் என கோபித்த லட்சுமி, கணவரை பிரிந்தார்.

தவறை உணர்ந்த பிருகு மகரிஷி திருமாலிடம் மன்னிப்பு கேட்டார். லட்சுமியிடம் அம்மா கோபம் கொள்ளாதீர். ஒரு யாகத்தின் பலனை அளிக்கும் பொருட்டு தெய்வங்களில் சாத்வீகம் ஆனவர் யார் என அறியும் பொறுப்பை என்னிடம் தேவர்கள் ஒப்படைத்தனர். ஆதலால் உன் கணவரை நான் எட்டி உதைக்க வந்தது போல் நடித்தேன்.

உலகத்தின் தாயாராகிய உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். நீ என் மகளாக பிறக்க வேண்டும் என்று வேண்டினார். பிறகு தாயாரும் மனம் குளிர்ந்து மகரிஷியை ஆசீர்வதித்து, நான் மகளாக பிறப்பதற்கு நீ தவம் இருக்க வேண்டும் என்று சொன்னாள்.

அதன்படி பிருகு புண்ணிய பூமியான கும்பகோணம் பகுதியில் தவமிருந்தார். இங்குள்ள ஹேமா புஷ்கரணியில் தாமரை மலரில் லட்சுமி அவதரித்தாள். கோமளவல்லி என பெயரிட்டு வளர்த்து. திருமாலுக்கு மணம் முடித்து கொடுத்தார் பிருகு. பெருமாள் சார்ங்கம் என்னும் வில்லேந்தி வந்ததால் சாரங்கபாணி எனப் பெயர் பெற்றார். பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இது 12வது திவ்ய தேசம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. இங்கே’ உத்தான சயன ‘கோலத்தில் பள்ளி கொண்டிருக்கிறார் .

இத்தலத்திற்கு வந்த திருமழிசை ஆழ்வார் சுவாமியை வணங்கி நடந்து கால்கள் வலிக்கிறது இங்கு நீ பள்ளி கொண்டிருக்கிறாய் என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். பெருமாளின் அருளை கண்ட திருமழிசை அப்படியே காட்சி கொடு என்றார்.

சுவாமியும் அவ்வாறே அருளினார் முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை உத்தான சயனம் என்பர். நாதமுனி என்பவர் சாரங்கபாணி வணங்க வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை ‘ஓராயிரத்துள் இப்பத்தும்’ என்று சொல்லி பாடினர். இதைக்கேட்ட நாதமுனி, இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா, என ஆச்சரியத்துடன் மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார்.

ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை. அப்போது அவரது கனவில் தோன்றிய பெருமாள் ஆழ்வார்திருநகரி சென்று நம்மாழ்வாரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்குமென்றார். அதன்படி வணங்கிய நம்மாழ்வார் ஆயிரம் பாடல்கள் கிடைக்குமென வந்த இடத்தில் 4000 பாடல்கள் கிடைத்தது. இவற்றை நாதமுனி தொகுத்தார்.

ஆழ்வார்கள் பல தளங்களில் மங்களாசாசனம் செய்த இப்பாடலின் தொகுப்பே ‘நலாயிர திவ்ய பிரபந்தம்’ ஆனது. ஸ்ரீரங்கம் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதியை அதிக ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தளங்களில் இவை இரண்டு மட்டுமே. இதற்கு அடுத்து கும்பகோணம் சாரங்கபாணி கோயில் ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பட்டிருக்கிறது.

திருமணத்திற்காக இவ்விடம் வந்த பெருமாள் தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே ஒளிந்து கொண்டார். திருமாலை காணாத தாயார் ஒருகணம் கலக்கம் அடைந்தார். அதன் பிறகு அவள் முன்தோன்றிய சுவாமி தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம் ‘பாதாள ஸ்ரீனிவாசர் சன்னதி’ என்ற பெயரில் உள்ளது.

திருமணத்திற்கு பிறகு இவர் மேடான இடத்தில் ‘மேட்டு சீனிவாச ராக’ தாயார்களுடன் தனி சன்னதியில் இருக்கிறார். இத்தளத்தில் சொர்க்கவாசல் கிடையாது .இதற்கு காரணம் சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார் ,எனவே இவரை வணங்கினால் முக்தி கிடைத்து விடும் என்பதால் சொர்க்கவாசல் கிடையாது.

மேலும் உத்திராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரை ,தட்சிணாயன வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்ல வேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறந்திருக்கும் .கோயிலில் உற்சவருக்கு மூலவருக்கான மரியாதைகள் செய்யப்படுகிறது.

பெருமாள் சங்கு சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால் இத்தளத்தில் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார். இதன் பெயராலே இவர் சாரங்கபாணி என்று அழைக்கப்படுகிறார். இத்தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். அவளைத் திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே இங்கு தாயாருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

தாயாரை வணங்கிய பின்பே பெருமாளை வணங்க வேண்டும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது. நடை திறக்கும் போது சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை இக்கோவில் கோமளவல்லி தாயார் சன்னதி முன்பாக நடக்கின்றது. தாயாரே பிரதானம் என்பதால் கோமாதா பூஜை தாயார் சன்னதியில் நடத்தப்பட்ட பிறகே சுவாமி சன்னதியில் நடக்கிறது. லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர் தீவிர பக்தி கொண்டிருந்தார் .அவர் இறுதிக்காலம் வரை சாரங்கபாணிக்கு சேவை செய்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை.

ஒரு தீபாவளி அன்று அவர் பெருமாளின் திருவடியை அடைந்தார் .சிரார்த்தம் செய்ய பிள்ளைகள் இல்லாமல் போனால் நரகம் சென்று அடைவார் என்பதால் .தனக்கு சேவை செய்த தன் பக்தனுக்காக பெருமாளே மகனாக இருந்து இறுதி சடங்குகள் செய்தார் என்று சொல்லப்படுகிகிறது .தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி திதி கொடுக்கும் நிகழ்வு ,இப்போதும் நடக்கிறது. ஆனால் இதை பக்தர்கள் காண இயலாது.

Recent Post