காஞ்சிபுரம் அத்திவரதர் தோன்றியது எப்படி தெரியுமா?

காஞ்சிபுரத்தில் 2000 ஆண்டுகள் பழமையான கோவில்களில் ஒன்றாக ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ராஜகோபுரம் மேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது. புராணக் கதைப்படி குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்பட்டு அவருக்கு 48 நாட்கள் சிறப்பு பூஜை செய்கின்றனர். பிறகு மீண்டும் அத்திவரதரை குளத்திலேயே வைத்துவிடுகின்றனர். 1979 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதாவது 40 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த ஆண்டு அத்திவரதரை வெளியே கொண்டு வந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது.

இந்து மதக் கடவுளான பிரம்ம தேவர் தனது படைப்புத் தொழிலை சிறப்பாக நடைபெற வேண்டுமென காஞ்சியில் ஒரு யாகம் நடத்தினார். தன்னை அழைக்காமல் யாகம் செய்த பிரம்ம தேவர் மீது சரஸ்வதி கடும் கோபம் அடைந்தார். இதனால் யாகத்தைத் தடை செய்ய அசுரர்களின் உதவியோடு வேகவதி ஆறாக மாறி வெள்ளப்பெருக்கெடுத்து வந்தார்.

பிரம்ம தேவரின் யாகத்தை காப்பாற்ற யாகத்தீயிலிருந்து திருமால் தோன்றி வேகவதி நடுவே சயனக்கோலம் கொண்டார். இதனால் சரஸ்வதி தன் பாதையை மாற்றிக் கொண்டார். இதனை அடுத்து காயத்திரி, சாவித்திரி துணையுடன் பிரம்ம தேவர் யாகத்தை முடித்துக் கொண்டார் என புராணம் கூறுகிறது.

யாகத்தை காப்பாற்றிய திருமாளிடம் தேவர்கள் வரங்கள் கேட்டனர். அவர்கள் கேட்ட வரத்தை எல்லாம் வாரி வழங்கியதால் பெருமாளுக்கு வரதர் என்று பெயர் உருவானது.

திருமால் புண்ணியகோடி விமானத்தில் சங்கு, சக்கரம், கதை தாங்கிய கோலத்தில் பிரம்ம தேவருக்கும் மற்ற தேவர்களுக்கும் காட்சியளித்ததாகவும், அந்த திருக்கோலத்தை பிரம்மதேவர் அத்திமரத்தில் வடித்து வழிபட்டதாகவும் புராணக்கதை கூறுகிறது.

திருமால் யாகத்தீயிலிருந்து எழுந்தருளியதால் அவருடைய தேகம் உஷ்ணத்தால் பின்னப்பட்டு விட்டது. இதனால் தன்னை ஆனந்தத் தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்தில் உள்ள சிலையை பிரதிஷ்டை செய்யுமாறு அருளியதாக புராணம் கூறுகிறது.

திருமால் பிரம்ம தேவருக்கு இட்ட கட்டளையின் படி 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்து நீரை வெளியே இறைத்துவிட்டு பெருமாளை வெளியே எடுத்து 48 நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

Recent Post