புதுக்கோட்டை ஆவுடையார் கோயில் வரலாறு

அறந்தாங்கியிலிருந்து 13 கி.மீ. தூரத்திலும் புதுக்கோட்டையிலிருந்து 52 கி.மீ தூரத்திலும் கடற்கரையை ஒட்டி இந்த ஆவுடையார் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவபெருமான் ஆவுடையார் என்று அழைக்கப்படுகிறார். இதனால் இக்கோவிலுக்கு ஆவுடையார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றினார்.

ஆவுடையார் கோயில், மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த இரண்டாம் வரகுண பாண்டியன் மன்னனின் (கி.பி. 862-880-இல்) அமைச்சராக இருந்தவர் மாணிக்க வாசகர். இவர் மன்னன் குதிரை வாங்க கொடுத்த பணத்தில் இங்கு சிவபெருமானுக்கு கோயில் எழுப்பினார். இதனால் மன்னனின் கோபத்திற்கு ஆளான மாணிக்கவாசகரை காப்பாற்ற சிவபெருமான் நரிகளை பரிகளாக மாற்றி திருவிளையாடல் புரிந்ததும், இந்தக் கோயில் உடன் தொடர்புடைய நிகழ்ச்சியே.

இந்த மண்டபத்தில் உள்ள கற்சங்கிலி 10-15 வளையங்கள் கொண்டது. இது ஒரே கல்லினால் செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது.

இங்குள்ள மூலஸ்தானத்தில் மூலவருக்கு உருவமில்லை. இதர கோயில்களை போன்று லிங்க வழிபாடும் இல்லை. இது போன்று இந்தக் கோயில் இதர கோவில்கள் போல கொடிமரம், நந்தி சிலைகள் கிடையாது. அதேபோல அம்மன் சன்னதியில் உருவ வழிபாடு கிடையாது. மூலஸ்தானத்தில் (லிங்கம் போன்ற) சிலைகள் ஏதும் இல்லை.எங்கும் நிறைந்த இறைவன் அருவமாகவே வழிபடுகின்றனர்.

வழிபாட்டு முறைகளில் இந்த கோயில் மற்ற கோயில்களிலிருந்து வேறுபாடு உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீபாராதனை செய்யும் தீபத்தை தொட்டு வணங்கி அனுமதிப்பதில்லை. மாணிக்கவாசகர் ஜோதியில் கலந்து உள்ளார் என்பதால் இந்த முறை பின்பற்றப்படுகின்றது.

கருவறைக்கு முன்னால் படையல் என்கின்ற பெரிய திட்டுக்கல் ஒன்று உள்ளது. இந்தக் கல்லில் தான் ஆறு கால பூஜை க்கு உரிய அமுது வைக்கப்படுகிறது. இந்த அமுதின் ஆவியை மட்டுமே சிவபெருமான். ஏற்றுக்கொள்வதாக நம்பப்படுகிறது. அமுது படைப்பு என்பது கைக்குத்தல் செய்யப்பட்ட புழுங்கல் அரிசியுடன் பாகற்காய் மற்றும் கீரை போன்ற காய்கறிகள் சேர்த்து சமையல் செய்து படைப்பதாகும். இது போன்ற வழிபாட்டு முறை தமிழகத்தில் உள்ள இதர எந்த சிவன் கோயில்களில் பின்பற்ற படுவதில்லை.

அழகுமிகு ராஜகோபுரம்

இந்தக் கோவில் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள ராஜகோபுரம் பழங்கால கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 100 அடி உயரம் கொண்ட இந்த ராஜ கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் கண்களுக்கு விருந்தளிப்பது போல் உள்ளது.

மூலவர் கோயில் விமானம் பொன்னோடு வேயப்பட்டது. தல விருட்சம் குருந்த மரமாகும். இக்கோயில் வாயில் முகப்பிலிருந்து மொத்தம் ஆறு மண்டபங்களின் கொண்டது . அவை ஆனந்த சபை, தேவசபை, கனக சபை, சிற்சபை, நடன சபை மற்றும் பஞ்சாட்சரம் என்று அழைக்கப்படுகின்றன.

ஆடி மாதம் – ஆனித்திருமஞ்சனம் பெருந்திருவிழா மற்றும் மார்கழி மாதத்தில் திருவாதிரை திருவிழா -ஆகியவை மிக விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதல்களுக்கு மட்டுமல்லாமல் ஞானம் பெறுவதற்காகவும் வருகின்றனர் என்பது ஒரு சிறப்புச் செய்தி.

பூஜை காலம் : திருவனந்தல், சிறுகாசேந்தி, கால சந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம் –என்று ஆறு கால பூஜைகள் இக்கோயிலில் நடைபெறுகின்றன.

Recent Post