ஊர் – திருகுருங்குடி
மாவட்டம் – திருநெல்வேலி
மாநிலம் – தமிழ்நாடு
மூலவர் – வைஷ்ணவ நம்பி
தாயார் – குறுங்குடிவல்லி நாச்சியார்
தீர்த்தம் – திருப்பாற்கடல், பஞ்சதுறை
திருவிழா – சித்திரை வசந்தோற்சவம், வைகாசி ஜேஷ்டாபிஷேகம், ஆவணி பவித்ர உற்சவம் ,புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி ஊஞ்சல் உற்சவம், தை தெப்ப உற்சவம். பங்குனி பிரம்மோற்சவம்.
திறக்கும் நேரம் – காலை 6:30 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை4:30 மணி முதல் இரவு 8 மணி வரை
தல வரலாறு;
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்யதேசங்களில் இது 79 வது திவ்யதேசம். இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை கொண்டு செல்ல நினைத்தபோது விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டெடுத்தார்.
அப்போது பூமித்தாய் இந்த பூமியில் உள்ள ஜீவராசிகள் பகவானை அடைய என்ன வழி என கூறுங்கள் என்று வராகமூர்த்தி இடம் கேட்கிறார். இறைவனும் இசையால் இறைவனை அடையலாம் என்கிறார்.
இதன் பயனாக ஒருமுறை பின்தங்கிய வகுப்பை சேர்ந்த ஒரு மனிதனுக்கும், பூதம் ஒன்றிற்கும் பிரச்சினை ஏற்பட்டது. பிரச்சனை முற்றி மனிதனை விழுங்க நினைத்தது பூதம்.
அதை அறிந்து அந்த மனிதனும் பூதத்திடம் இன்று ஏகாதசி, எனவே கைசிகமென்ற விரதத்தில் பகவானை பாடி விட்டு வருகிறேன். அதன்பின் நீ என்னை உண்ணலாம் என்று கூறுகிறான். ஏகாதசி தினத்தில் இத்தலத்தில் பாடியதால் அந்த மனிதனுக்கும், பாடலை கேட்டதால் பூதத்திற்கும் மோட்சம் கிடைத்தது.
திருக்குருங்குடியின் அருகே உள்ள மகேந்திரகிரி மலை அடிவாரத்தில் வசித்தவர் நம்பாடுவான். இவர் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர். இவர் கோயிலினுள் செல்ல முடியாமலும், அழகிய நம்பியை பார்க்காமல் போனதற்கும் மிகவும் வருத்தப்பட்டார்.
அப்போது பெருமாள் கொடிமரத்தை சற்று விலகி இருக்கச் சொல்லி நம்பாடுவான்க்கு தாமே தரிசனம் தந்தார். வேறு எந்த கோயில்களை போலல்லாமல் கொடிமரம் விலகி இருப்பதை நாம் இப்போதும் காணலாம்.
சைவ-வைணவ ஒற்றுமையை எடுத்துக் காட்டும் விதமாக கோயிலின் உள்ளேயே சிவன் கோயிலும், பைரவர் சன்னதி அமைந்திருப்பது மிகச்சிறப்பாக உள்ளது.
கோயில் மூலவரான அழகிய நம்பிக்கு பூஜை நடக்கும்போது, இங்குள்ள சிவனுக்கு பூஜை நடந்து விட்டதா என்பதை அறிய, சுவாமியின் பக்கத்தில் நிற்கும் அன்பருக்கு குறை ஏதும் உண்டா என்று பட்டர் கேட்பார் அதற்கு குறை ஒன்றும் இல்லை என பட்டர்கள் பதில் அளிப்பார்கள்.
இது இன்றும் நடைமுறையில் உள்ளது. இத்தலத்தை நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார் என நான்கு நாயன்மார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். நம்மாழ்வாராக அவதரித்ததும் இந்த அழகிய நம்பி தான்.
திருமங்கையாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்தது இத்தலம் தான். நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் காட்சி தருகிறார். பூமாதேவி இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு குரங்கச் ஷேத்திரம் என்ற பெயர் உண்டு.