பிறந்த குழந்தையை குளிக்க வைப்பதில் குழப்பமும் சந்தேகமும் இன்றளவும் உள்ளது. குழந்தைகளை குளிப்பாட்டும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிறந்த குழந்தையை 11 நாட்களுக்கு பிறகு குளிக்க வைப்பது நமது முன்னொர் காலத்தில் இருந்த பழக்கம். ஆனால் தற்போது மருத்துவர்கள் தினமும் குழந்தையை குளிக்க வைக்க அறிவுறுத்துகிறார்கள்.
கோடை காலங்களில் காலை 9 மணி அல்லது 10 மணிக்குள் குழந்தையை குளிப்பாட்டலாம். குளிர் பிரதேசமாக இருந்தால் வெயில் வந்த பிறகு குளிக்க வைக்க வேண்டும்.
குழந்தையை குளிப்பாட்டுவதற்கு முன்பு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது. குளிக்க வைத்த பிறகு பால் கொடுத்து தூங்க வைக்கலாம். குழந்தைகளை தினமும் குளிப்பாட்டி சுத்தமாக வைத்துக் கொண்டால் ஆரோக்கியமான வளர்ச்சி ஏற்படும்.
குளிர் நாட்களில் குழந்தைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து விட்டு குளிக்க வைப்பது நல்லது. இதனை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.
குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் செய்வதற்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது சுத்தமான நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். அதே போல் பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயும் பயன்படுத்தலாம்.