வாழைமரத்தின் அற்புதமான மருத்துவ குணங்கள்..!

வாழை மரத்தின் பழம், காய், பூ, தண்டு, இவைகளை நாம் உணவாகக் கொள்கிறோம். ஆனால் வாழை மரம் பல நோய்களைத் தீர்க்கவும் பயன்பட்டு வருகிறது.

ஆசனக்கடுப்பு நீங்க:

வாழைப் பூவைக் ஆய்ந்து, வேக வைத்து எடுத்து கையினால் பிசைந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அந்தச் சாற்றில், கறிவேப்பிலையை மை போல் அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து கலக்கி, மேலும் ஒரு டம்ளர் தயிர் கலந்து, காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் போதும். இதேபோல் தொடர்ந்து மூன்று நாள்கள் எடுத்து வந்தால் சீதபேதி குணமாகும்.

மலத்தில் இரத்தம் வருவது நீங்க

வாழைப் பூவை உரலில் போட்டு அரைத்து, சாறு எடுத்து காலை அரை ஆழாக்கு அளவு சாப்பிட்டு வந்தால் மூலத்தில் இரத்தம் வருவது நின்று விடும் . ஆனால் பூரணமாகக் குணமாகும் வரை கொடுத்து வர வேண்டும்

இரத்த மூலம் குணமாக

ஐந்து வாழைப் பிஞ்சுகளை பொடியாக நறுக்கி, மோரில் தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு நாள் ஊற வைத்து மறுநாள் முற்றத்தில் காயவிட வேண்டும். மாலையில் காய்ந்த வாழை பிஞ்சுகள் மறுபடியும் மீதமுள்ள மோரில் போட்டு முடி வைக்க வேண்டும். மறுநாள் முற்றத்தில் காய விட வேண்டும்.

இவ்வாறு மோர் குடிக்கும் வரை பிஞ்சை ஊற வைத்து, காய வைத்து பின் பத்திரப்படுத்த வேண்டும். இதை எண்ணெயில் வறுத்தும் உண்ணலாம். சாதத்துடன் உண்ணலாம். இப்படி 40 நாள் சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் பூரணமாகக் குணமாகும்.

பாம்பு விஷம் இறங்க

பாம்பு கடித்து விட்டது என்று தெரிந்தவுடன் வாழை மட்டை சாற்றில் அரை டம்ளர் அளவும், தும்பை இலைச் சாற்றில் அரை டம்ளர் அளவும் எடுத்து ஒன்றாகக் கலந்து கொடுத்து விட்டால் பாம்பு விஷம் முறியும்.

சில சமயம் பாம்பு விஷம் ஏறி நோயாளி படுத்து விடுவார். வாய் கட்டி விடும். இந்த சமயம் மருந்து கொடுக்க முடியாது. வாழை மரத்தின் பட்டைகளை உரித்து, அதைத் தலையில் கனமாகப் பரப்பி அதன் மேல் நோயாளியை படுக்க வைத்து விட்டால் சிறிது நேரத்தில் நிலைமை மாறும்.

நீர்க்கடுப்பு நீங்க

உஷ்ணம் காரணமாக சிறுநீர் சற்றுச் சிவந்த நிறத்துடன் இறங்கும். இதை போக்க வாழைப் பட்டையை தணலில் வாட்டி முறுக்கிப் பிழிந்தால் அதிலிருந்து சாறு வரும். அந்த சாற்றில் அரை டம்ளர் அளவு எடுத்து காலை வேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாள் கொடுக்க நீர்க் கடுப்பு குணமாகும்

சிறுநீரக கல் கரைய

வாழைத் தண்டின் மேல் தோலை சீவிவிட்டு பொடி துண்டுகளாக நறுக்கி வாழைப் பிஞ்சுகளை ஊற வைத்து மோரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வற்றலாக காய வைத்த வாழைத் தண்டை எண்ணெயில் வறுத்து வைத்துக் கொண்டு வெறும் வாயில் தேவையான அளவு தின்று வரலாம்

இந்த விதமாக செய்து வந்தால் சிறுநீரில் உள்ள கல் நாளாவட்டத்தில் கரைந்து ஒன்றில்லாமல் போய் விடும்.