சிலர், இளமை வயதுகளைத் தாண்டிய பிறகும் கம்பீரமாய்க் காட்சியளிப்பார்கள். சிலரோ இளம் வயதிலேயே முதுமையானவர்கள் போல் விளங்குவார்கள். இவர்கள் மட்டும் எப்படி அன்று பார்த்தது மாதிரியே இன்றும் இருக்கிறார்கள் என்று சிலரைப் பார்க்கும்போது தோன்றுகிறது அல்லவா. அது போல் நாம் எப்படி இளமையைத் தக்க வைத்துக்கொள்வது என்பதை இந்தக் குறிப்புகளைப் படித்து பின்பற்றுங்கள்.
நமது வயதை முதலில் வெளிப்படுத்துவது சருமம்தான். அதை ஒழுங்காக, சீராகப் பராமரித்தாலே தமது இளமை நீடித்திருக்கும். பெண்களின் சருமத்தைக் காட்டிலும் ஆண்களின் சருமம் 20 சதவிகிதம் கூடுதல் கடினத் தன்மையுடன் இருக்கும். ஆனால் வயது கூடும் போது கொலாஜன் என்ற புரதம் குறைவதால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது.
உடற்கூறியலின்படி பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு முதிர்ச்சி சில காலத்துக்குப் பின்புதான் தோன்றும். ஆனால் ஒரு சில பழக்க வழக்கங்களால் கண்களுக்கு இயல்பான வயதில் தோற்றத்தைக் காட்டிலும் முதுமையான தோற்றம் ஏற்படுகிறது.
ஆண்கள் பொதுவாக அதிக அளவில் வெயிலில் அலைவதாலும், மாசுபட்ட காற்றைச் சுவாசிப்பதாலும் சருமம் பாதிக்கப்படுகிறது. எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும் சருமத்தில் முதுமைத் தோற்றம் தெரிகிறது. இதைத் தடுக்க, முகத்தைப் பாதுகாக்கும் வகையில் தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தண்ணீர் நல்லது
இளமையைத் தக்கவைப்பதில் தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. சருமத்தை மென்மையாக்குவதற்கும் பாதுகாப்பதற்கும் தினமும் குறைந்தபட்சம் 1 லிட்டர் தண்ணீர் பருகுவது நல்லது என்கிறார்கள் சரும நிபுணர்கள்.
தொடர்ந்து முகச் சவரம் செய்வதன் காரணமாக முகத்தில் முதிர்ச்சி தோன்றும். அதனால் ஈரப்பதத்துடன் கூடிய ஷேவிங் கிரீமைப் பயன்படுத்துவது நல்லது. மேலும், முகச்சவரம் செய்யும் போது முடிகள் வளர்த்திருக்கும் திசையில் சவரம் செய்து, வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முகம் வாடாமல் புத்துணர்ச்சியுடன் தோன்றும்.
இளமை காக்கும் உணவுகள்
ஆண்கள் என்றும் இளமையுடன் இருக்க, தொடர்ந்த உடற்பயிற்சியும் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வது அவசியம். கேரட், தக்காளி கிரீன் டீ போன்றவற்றையும் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.
குடிப்பழக்கம், புகை பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மதுபானம். புகைபிடிப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் ரத்த ஓட்டத்தைத் குறைப்பதால் சருமத்துக்கும் தேவையான சத்துகள் கிடைக்காமல் இருக்கும். இதனால் வயதான தோற்றம் எளிதில் வந்துவிடுகிறது.
ஆழ்ந்த உறக்கம் அவசியம்
சரியான உறக்கம் இல்லாததாலும் உடல் அழகு பாதிக்கப்படும் என்பதை பலர் அறிவதில்லை . சரியான தூக்கமின்மை, சோர்வை ஏற்படுத்தும். இளமையையும் பாதிக்கும். இரவில் குறைந்தது 6, 7 மணி நேர உறக்கம் அவசியம். அதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் மனதில் புத்துணர்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்திலும் சருமத்திலும் பொலிவு ஏற்படும்.
கவலை கூடாது
ஏதாவது ஒரு கவலையான நிகழ்வை நினைத்துக் கொண்டு அதில் மூழ்குவது பலருக்கும் பழக்கமாக இருக்கிறது. கவலை உடல் நலத்தையும் அழகையும் பாதிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை . எனவே கவலையை விட்டொழியுங்கள். மகிழ்ச்சியுணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். பிறகு பாருங்கள், உங்கள் முகம் ஜொலிக்கும்.