சிறு தானிய வகைகளில் மிகவும் சத்து நிறைந்தவை கம்பு ஆகும். கம்பில் புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது.
உடல் வளர்ச்சி
கம்பு உணவுகளில் அதிகப் புரத சத்து இருப்பதால் உடலுக்கு வலுவளித்து ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. 100 கிராம் கம்பில் 15 கிராம் அளவிற்கு புரதச்சத்து நிறைந்துள்ளது. வளரும் குழந்தைகளுக்கு கம்பு உணவினை அடிக்கடி கொடுத்து வந்தால் அவர்களது உடல் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.
உடல் சூட்டை குறைக்கும்
உடல்சூடு பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள் தினமும் குறிப்பிட்ட அளவு கம்பு கூழ் குடித்து வந்தால் உடல் சூடானது தணிந்து உடல் குளிர்ச்சி பெறும்
உடல் எடையை குறைக்க
கம்பங்கூழில் அதிக அளவு நார்ச்சத்தும், குறைந்த அளவு கொழுப்பு சத்தும் உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் ஒரு வேளை கம்பு உணவை எடுத்துக்கொண்டால், இவை உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உதவும்.
உயர் ரத்த அழுத்தத்தை போக்கும்
கம்பில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிக அளவு இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும். தினம் ஒரு வேளை என்ற வீதம் எடுத்துக்கொள்வது மிக ஆரோக்கியமானது.
மலச்சிக்கலைப் போக்கும்
முறையற்ற உணவுப் பழக்கங்களால் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படும், அவ்வாறு உள்ளவர்கள் தினமும் கம்பு எடுத்துக்கொள்ளும்போது அதிலுள்ள நார்சத்து மலச்சிக்கல் வராமல் பாதுகாக்கும்.
சர்க்கரை நோய் தடுக்கும்
கம்பில் அதிக அளவு நார்ச்சத்தும், மிக குறைந்த அளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளதால் இதனை எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்கும்.
பருவமடைந்த பெண்களுக்காக
பருவமடைந்த பெண்கள் மாதத்தில் நான்கு முறையாவது கம்பை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. மாதவிடாய் காலத்தில் அடிவயிறு வலியும், ரத்தப்போக்கும் உண்டாகக்கூடும். இந்த சமயங்களில் கம்பு கூழ் அல்லது கம்பு சூப் எடுத்துக்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கும்.
வயிற்றுப்புண் போக்கும்
வயிற்றுப்புண் இருப்பவர்கள் தினமும் ஒருவேளை கம்பு உணவினை எடுத்துக் கொள்வதால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். சாப்பிட்ட உணவு நன்றாக செரிமானம் ஆகும் மற்றும் குடலை சுத்தம் செய்து, குடல் புற்றுநோய் வராமலும் பாதுகாக்கும்.
தாய்ப்பால் சுரக்கும்
தாய்ப்பால் கொடுப்பவர்கள் அடிக்கடி கம்பு உணவினை எடுத்துக்கொண்டால் தாய்ப்பால் நன்று சுரந்து அது தாய்க்கும், குழந்தைக்கும் மிகச் சத்தாக இருக்கும். தாயின் உடல் சோர்வை போக்கும்.
முடி வளர்ச்சிக்கு உதவும்
முடி வளர்ச்சிக்கு உதவும் புரதம் எனும் கெரட்டின் சத்து கம்பில் அதிகமாக உள்ளது. தினமும் உணவில் எடுத்துக்கொண்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும், முடி கொட்டுவது குறையும், இளநரையை தடுக்கும்.