பாஜகவோடு கூட்டணி வைத்ததால் தேர்தலில் தோல்வி அடைந்தோம் – உண்மையை போட்டு உடைத்த சி.வி சண்முகம்

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

மக்கள் மத்தியில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. தி.மு.க. தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பெருவாரியான பொதுமக்கள் விருப்பப்பட்டு வாக்களிக்கவில்லை. நாம் 3-வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்ந்திருப்போம். ஆனால் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் பா.ஜ.க. கூட்டணி தான். இதனால் முழுமையாக நாம் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்து விட்டோம்.

latest tamil news

விழுப்புரம் தொகுதியில் சுமார் 20 ஆயிரம் சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளது. இதில் 18 ஆயிரம் வாக்குகள் விழுப்புரம் நகரத்தில் உள்ளது. ஆனால் 300 வாக்குகள் கூட எனக்கு கிடைக்கவில்லை.

சிறுபான்மையினர் மக்களுக்கு நம் மீது எந்த வருத்தமும், கோபமும் இல்லை. கொள்கை ரீதியாக அவர்கள் பா.ஜ.க.வோடு முரண்பட்டு இருந்தார்கள். பாஜகவோடு கூட்டணி வைத்ததால் மிகப்பெரிய இழப்பை நாம் சந்திக்க நேரிட்டது. எனவே வரும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற கட்சியினர் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என அவர் பேசியுள்ளார்.