அருள்மிகு தெய்வநாயகர் திருக்கோயில்

ஊர்: திருத்தேவனார்தொகை

மாவட்டம்: நாகப்பட்டினம்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : தெய்வநாயகப்பெருமாள்

தாயார் : கடல் மகள் நாச்சியார்

தீர்த்தம்: சோபன, தேவசபா புஷ்கரிணி

சிறப்பு திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி

திறக்கும் நேரம்: காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

தல வரலாறு;

தனக்கு கிடைத்த வைகுண்ட மாலையை துர்வாச முனிவர் இந்திரனுக்கு கொடுத்தார். அதை இந்திரன் உதாசினப்படுத்தி ஐராவதத்தின் மேல் வீசினார். இதைக்கண்டு சினம் கொண்ட முனிவர், லட்சுமிகடாட்சம் உன்னை விட்டு விலகி தரித்திரம் வந்து சேரட்டும் என சாபமிட்டார்.

அதிர்ந்து போன இந்திரன் முனிவரிடம் சாப விமோசனம் கேட்டான். அதற்கு முனிவர் சினம் குறையாமல் உனக்கு வாழ்க்கை பாடம் கற்பித்த உன் குருவிடம் சென்று கேள் என்றார். அவ்வாறே அவரும் கங்கை கரையில் தவத்தில் இருந்த குரு பிரகஸ்பதியிடம் சென்று கேட்டார். குரு பிரகஸ்பதி உன் தலை எழுத்தை எழுத பிரம்மனிடம் சென்று கேள் என்றார். பிரம்மனோ இது பெருமாள் காரியம் நான் ஒன்றும் செய்ய இயலாது என்றார்.

இந்திரன் பெருமாளிடம் சென்றான். பெருமாள், என் பக்தர்களை புண் படுத்திய யாரையும் நானும் என் மனைவியும் ஏற்கமாட்டோம் என்றார். நீ, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடையும் நேரம் வரை காத்திரு என்றார். பாற்கடல் கடையும் வேலை வந்தது, அதில் மகாலட்சுமி தோன்றினாள். இதைக் கண்ட இந்திரன் மகாலட்சுமி பலவாறாக போற்றினார். இதனால் மகாலட்சுமி மனம் சாந்தி பெற்று ஒரு மாலையை இந்திரனிடம் வழங்கினார். அம் மாலையை கண்களில் ஒற்றிக்கொண்டு இந்திரன் மீண்டும் லட்சுமி கடாட்சம் பெற்று தேவேந்திரன் ஆனான்.

பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இது 36 வது திவ்ய தேசம். இத்தலத்தில் பெருமான் மேற்கு பார்த்து இருப்பதால் விசேஷ பலன் உண்டு. திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல பெருமாளையும் தாயாரையும் ஒரு முறை தரிசித்தால் பலன் நிச்சயம் என நம்பப்படுகிறது. மணமுடிக்கும் காட்சியை காண தேவர்கள் அனைவரும் வந்ததால் இத்தலத்திற்கு திருத்தேவனார்த்தொகை எனப் பெயர் பெற்றது.

Recent Post

RELATED POST