தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள சிறிய கடற்கரை கிராமம் ‘தனுஷ்கோடி’.அதன் பெயரைப் போலவே தமிழகத்தின் அல்லது இந்தியாவின் கடைக்கோடியில் உள்ளது என்று கூட கூறலாம். இங்கிருந்து இலங்கை வெறும் 15 கிமீ மட்டுமே தூரமே..
வில்லைப் போன்று வளைந்த கடற்கரையைக் கொண்டிருப்பதால் இதனைத் தனுஷ்கோடி என்றனர். கோடி என்பது முனை. வானைத் தொடும் முனை ‘கோடு’. அது போல கடலில் அமைந்துள்ள நிலமுனை இந்தக் ‘கோடி’.
பலரும் வாழ்ந்து வந்த அவ்வழகிய ஊரில் இன்று மனிதர்கள் வசிக்க தகுதியற்ற பகுதியாகத்தான் அரசால் கூறப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் 1964ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோரப்புயல்தான். 1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட புயல் தாக்குதலால் சிக்கி சின்னாபின்னமான தனுஷ்கோடி முற்றிலும் சிதிலமடைந்தது.
அதன் பின்னர் அதிகம் மக்களால் வசிக்கப்படாத பகுதியாகவும், அன்றைய தனுஷ்கோடியின் மிச்சமே இப்போது உள்ளது.
இந்தியாவில் அதிகம் பேர் வந்து செல்லும் இந்துக்களின் புண்ணியஸ்தலம் ராமேஸ்வரம் ஆகும். ஆன்மீக பயணமாக ராமேஸ்வரத்திற்கு வருபவர்கள் கண்டிப்பாக சென்று பார்த்து வருவது தனுஷ்கோடியைத்தான்.
ராமேஸ்வரத்திற்கு அருகில் இருந்தாலும் கடற்கரையை விரும்பும் சுற்றுலாப் பயணிகள் ரசிப்பது தனுஷ்கோடியைத் தான். அழகிய கடற்கரையைக் கொண்ட தனுஷ்கோடியின் வெள்ளை மணலில் கால்பதித்து நடக்கவும், வெள்ளி போன்று ஜொலிக்கும் கடலில் கால் நனைத்து இன்பம் பெறவும் பெருவாரியான மக்கள் வந்து செல்கின்றனர்.
1964 புயலால் ஏற்பட்ட சேதங்களும், அதன் மிச்சங்களும் கண்கூடாக பார்க்கலாம், அப்போது தனுஷ்கோடிக்கு சென்ற ரயில் பாதை, சர்ச் இடிபாடுகள் உள்ளிட்டவை பார்க்க வேண்டியவை ஆகும். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் கோதண்டராமர் கோவில் உள்ளது, கடலால சூழப்பட்ட அக்கோவிலுக்கு மட்டும் பிரத்யேக ரோடு உள்ளது, அங்கு கூடும் கடல் பறவைகள் பார்க்க வேண்டியவை.
தனுஷ்கோடிக்கு முன்னர் சாலை வசதி சரியாக இருந்ததில்லை, தற்போது மத்திய அரசின் சார்பில் அகலமான சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு அரசுப் பேருந்து சேவை உள்ளது. இதுமட்டுமல்லாமல் வேன்களும், ஜீப் போன்ற வாகனங்களும் சேவையில் உள்ளன. பயண நேரம் அரை மணி நேரங்களுக்குள் மட்டுமே.