உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் உயர் ரத்த அழுத்த நோய்க்கு மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் உணவுப் பழக்கத்தை மாற்றி அமைப்பது அவசியம்.
அமெரிக்காவின் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசன் வெளியிட்ட ஆய்வின்படி, ரத்த நாளங்களை அமைதிப்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்குவதன் மூலம் பூண்டு உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பூண்டில் உள்ள அலிசின் என்னும் உட்பொருள் ரத்த அழுத்தத்திற்கு எதிராக போராடுவதால் பூண்டை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. Flavanoid மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்ஸ் நிறைந்த ஹவ்தோர்ன் பழம் அதிகமான ரத்த அழுத்தத்தை குறைப்பதாக கூறப்படுகிறது.
ஏன்ஜியோடென்சின் (angiotensin) கன்வெர்டிங் என்சைம் என்ற உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமான நொதியை செயலிழக்க வைக்கும் ஆற்றல் செம்பருத்திக்கு உண்டு. அன்றாடம் செம்பருத்தி தேநீர் அருந்துவது சிறப்பான பலன்களை தரும். சமையலில் சுவைக்காக சேர்க்கப்படும் இலவங்கப்பட்டை ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்மபடுத்தி ரத்த அழுத்தத்தையும் சீர் செய்யும் பண்பு ஆலிவ் இலைக்கு உண்டு. மருந்துகளை தவிர்த்து உணவினால் மட்டுமே ரத்த அழுத்தத்தை குறைப்பது சாத்தியமில்லை. மருத்துவரின் ஆலோசனையோடு தேவையான மருந்துகளை உட்கொண்டு ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையை கடைபிடித்தால் ரத்த அழுத்தம் மட்டுமில்லாமல் பல உடல் உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.