தண்ணீரை சுத்தமாக்கும் முருங்கை இலை

இன்று சுற்றுச்சூழல் மிக மோசமானதால்,தண்ணீரை தூய்மைப்படுத்த எதையெதையோ கண்டுபிடிக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால் நம் முருங்கை, தண்ணிரை தூய்மைப்படுத்த வல்லது என்று அமெரிக்காவின் கார்னேஜி மெல்லோன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

தண்ணீரைத் தூய்மைப்படுத்தும் மரங்கள், செடி, கொடிகள் என்று நடத்திய பல ஆராய்ச்சிகளில் இதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதற்கு குறைந்த செலவே ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

நம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது முருங்கை. நம் ஊர்களில் முருங்கைமரத்தின் இலை, பூ, காய் என அனைத்தையும் நம் இந்திய மக்கள் காலம் காலமாக உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தி வருகிறோம்.

இப்போது முருங்கையை பயன்படுத்தி ‘எப்சான்ட்’ என்ற பொருளைத் தயாரித்துள்ளனர். அதாவது ஒருதொட்டியில் மணலைப் பரப்பி, அதன் மீது சிலிக்கான் துகள்களைக் கொட்டி, பிறகு அதன் மீது முருங்கைக்கீரை மற்றும் விதையிலிருந்து எடுக்கப்பட்ட புரதத்தை பரவலாக வைப்பர். இதுவே ‘எப்சான்ட்’, இதன் மூலம் தண்ணீர் செலுத்தப்படும்போது அவற்றில் உள்ள நுண்ணுயிர்கள் அழிக்கப்பட்டு,தேவையில்லாப் பொருட்கள் வடிகட்டப்படுகின்றன. இறுதியாக, அசுத்தங்கள் நீக்கப்பட்ட நீர் நமக்குக் கிடைக்கும்.

இந்த முறையின் மூலம் தண்ணீரைச் சுத்தமாக நீண்ட நாட்கள் வரை வைத்திருக்கலாம். தவிர, உலகில் 210 கோடி மக்கள் பாதுகாப்பான குடிநீர் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வளர்ந்த நாடுகளில் வசிப்பவர்கள் என்று ஐ.நா. சபையின் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.

Recent Post

RELATED POST