தேனில் குளுக்கோஸ், ஃப்ருக்டோஸ் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. அத்துடன் இரும்புச்சத்து, கால்சியம், போஸ்பேட், க்ளோரின், பொட்டாசியம், மக்னீசியம் இருக்கிறது. இது மிகச்சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகும்.
தேன் இயற்கையாகவே சத்தும், சுவையும் உள்ள உணவாகும், தேன் வெளிபடையாக இனிப்பு சுவை உடையது. ஆயுர்வேத வைத்தியத்திலும் சித்த வைத்தியத்திலும் பல உணவுகளை தேனில் குழைத்து உண்ண தருகிறார்கள்.
தேன் குடலிலுள்ள புண்களை அகற்றுகிறது. தேனை உட்கொண்டால் பசியும், ருசியும் உண்டாவதோடு நல்ல தூக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கும், குறைவாக உள்ளவர்களுக்கும் தேன் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் தினமும் வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து குடித்து வர உடலில் உள்ள தேவையற்ற சதைகள் குறையும். உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இரவு உணவிற்குப்பின் ஒரு கப் பசும்பாலில் இரண்டு தேக்கரண்டி தேன் விட்டு சாப்பிட்டு வர உடல் பருமன் அதிகரிக்கும்.
தீ பட்ட காயங்களுக்கு தேன் ஒரு சிறந்த மருந்தாகும். வெந்நீரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து ஒரு தேக்கரண்டி தேனும் கலந்து தினமும் பருகி வந்தால் நல்ல குரல் வளம் கிடைக்கும். தொண்டைக்கட்டு நீங்கும். தொற்று நோய்கள் விலகும்.
பேரீச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கும். அதோடு தேனில் உள்ள சத்துக்களும் கிடைக்கும். ரோஜா மலரின் இதழ்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு குளிர்ச்சியையும் பலத்தையும் தரும்.
மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் ஊறும். எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும்.
தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து சாப்பிட குடல் புண், வாய்ப்புண் குணமாகும்.