திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் இன்று பலரும் மின்சாரத்தால் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மாறி வருகின்றனர்.

ஸ்கூட்டர்களுக்கு எதிர்காலத்தில் பெரும் டிமாண்ட் இருக்கும் என்பதால் பன்னாட்டு நிறுவனங்களும் சில இந்திய நிறுவனங்களும் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் திடீர் திடீரென்று ஸ்கூட்டர்கள் தீப்பற்றி எரியும் செய்திகள் மக்கள் மத்தியில் பீதியை கிளப்புகிறது.

சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென்று தீப்பிடித்து எரிந்த செய்தி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் வேலூர், திருச்சி, திருவள்ளூர், மணப்பாறை ஆகிய இடங்களில் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்து மக்களை பயமுறுத்தியது.

இதுபோன்ற விபத்துக்களை தவிர்ப்பது எப்படி என்பதை இதில் பார்ப்போம்.

பேட்டரியை சார்ஜ் செய்யும்போது இஷ்டம்போல சார்ஜர்களை பயன்படுத்தக்கூடாது. இத்தனை வோல்ட் பேட்டரிக்கு இத்தனை வோல்ட் சார்ஜர் பயன்படுத்த வேண்டும் என்று வரையறைகள் இருக்கின்றன.

எனவே விலை குறைவு என்று கண்ட சார்ஜர்களை வாங்கி பயன்படுத்தாமல் வாகன தயாரிப்பு நிறுவனம் கொடுக்கும் சரியான சார்ஜரை பயன்படுத்த வேண்டும்.

மற்றவர்கள் பயன்படுத்தும் சார்ஜர்களை வாங்கி பயன்படுத்த வேண்டாம். அது உங்கள் பேட்டரிக்கு பொருந்தவில்லை என்றால் ஆபத்துதான்.

அளவுக்கு மட்டுமே சார்ஜ் போடுங்கள். விடிய விடிய சார்ஜ் போட்டு விட்டு தூங்குவது தவறு. (இது செல்போனுக்கும் பொருந்தும்)

வேகமாக சார்ஜ் ஏற வேண்டும் என்பதற்காக சக்தி வாய்ந்த சார்ஜர்களை பயன்படுத்தும் போது சரியான பிளக்குகளைப் பயன்படுத்துங்கள்.

அதேபோல் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து நிறுத்திய உடனே சார்ஜ் செய்யாமல் 10 நிமிடங்கள் கழித்து சார்ஜ் செய்யுங்கள்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமில்லை. மின்சாரத்தால் இயங்கும் எந்த பொருளையும் கவனமாக கையாள வேண்டும். அவ்வாறு செய்தால் விபத்துகளை தவிர்க்கலாம்.

Recent Post

RELATED POST