இந்தியாவில் உள்ள மற்ற விலங்குகளை காட்டிலும் பாம்புகள் பற்றி அறியப்பட்ட உண்மைகள் குறைவு. பெரும்பாலான பாம்புகள் தீங்கற்றவை. பாம்புகள் தனது தற்காப்புக்காக கடிக்கும்.
பாம்புகளுக்கு கால்கள் கிடையாது. தனது செதில்கள் மூலம் உணர்ந்து செயல்படும். மழைக்காலங்களில் எல்லா வகையான பாம்புகளும் மிக துடிப்பாக செயல்படும்.
பாம்பு உயிரினம் உலகத்தில் தோன்றி 13 கோடி ஆண்டுகள் ஆனதாகவும், பல்லிகளில் இருந்துதான் பாம்புகள் பரிணாம வளர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்கள் மட்டுமே நச்சுடையவை.
இந்தியாவில் அதிக விஷமுள்ள பாம்பு கட்டுவிரியன். ஆனால் மனிதர்களை அதிகமாக கடிக்கும் பாம்பு கண்ணாடிவிரியன். இது மனித உயிரை கொல்லும் கடுமையான விஷத்தன்மை கொண்டது.
நச்சுத்தன்மை இல்லாத பாம்புகள் கடித்தால் தடிப்பு, சொறி, உடல் வீக்கம் ஏற்படும், உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
பாம்புகளுக்கு காது கேட்காது. பாம்பாட்டி மகுடியை அப்படியும் இப்படியும் அசைத்து ஆட்டும் போது, பாம்பும் தன் பார்வையை மகுடி மீது செலுத்தி அதற்கேற்றவாறு ஆடுகிறது.
தரையில் நடக்கும் அதிர்வுகளை உணர்ந்து அது செயல்படுகிறது. சில வகை பாம்புகளுக்கு கண் பார்வை மிக கூர்மையாக இருக்கும். காற்றிலும் தரையிலும் வரும் வாசனையை நுகர்ந்து அறியும் திறன் பாம்புகளுக்கு உண்டு.
இரையை தேடும் போது தனது நாக்கை வெளியே நீட்டும். பாம்பு தனது உடலில் கொழுப்பை சேமித்து வைத்துக்கொண்டு பல மாதங்கள் வரை உணவு உட்கொள்ளாமல் வாழும்.
பொதுவாக பாம்புகள் எலி, தவளைகளை அதிகமாக உட்கொள்ளும். நாகப்பாம்பு, கட்டுவிரியன் பாம்புகள் பிற வகை பாம்புகளை உணவாக சாப்பிடும்.
வாசனை மூலம் ஆண், பெண் பாம்புகள் ஒன்றையொன்று இனம் கண்டு கொள்ளும்.
சில வகை பாம்புகள் தண்ணீரில் முட்டையிடும். சில பாம்புகள் தன உடலுக்குள் முட்டை பொறித்து குட்டிகளாக வெளியிடும்.
மலைப்பாம்புகள் அதிகமான எடையும், வலுவும், நீளமும் கொண்டவை.
பாம்புகள் பற்றிய மூட நம்பிக்கை:
- நல்ல பாம்பு மகுடியின் இசைக்கேற்ப படம் எடுத்து ஆடும்.
- நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் ஒரே இனத்தை சேர்ந்த ஆண், பெண் பாம்புகள்.
- நல்ல பாம்பு மிகவும் வயதானவுடன் தன் தலையில் மாணிக்ககல் வைத்திருக்கும்.
- நல்ல பாம்பையோ அல்லது வேறு வகை பாம்பையோ கொன்றுவிட்டால் அதன் ஜோடி கொன்றவரை பழி வாங்கும் என்பது.
- பாம்புகள் வழவழப்பாக இருக்கும்.
- பாம்புகள் பாலை விரும்பி குடிக்கும்.
- மண்ணுளிப் பாம்புகளுக்கு இரண்டு தலைகள் உண்டு. அவைகள் கடித்தால் தொழுநோய் வரும்.
- பச்சைப் பாம்பு கண்களை கொத்தும்.
- கொம்பேறி மூக்கன் – இந்த பாம்பு ஒருவரை தீண்டிவிட்டால் மரத்தின் உச்சியில் ஏறி நின்று அவர் எரிக்கப்பாடுகிறாரா என்று பார்க்குமாம். உண்மை என்னவென்றால், கொம்பேறி மூக்கன் நச்சற்ற பாம்பு.
இவை அனைத்தும் கட்டுக் கதைகள். சிலரால் பரப்பப்பட்ட மூட நம்பிக்கைகள்.