மஞ்சள் வெல்லம், பிரவுன் வெல்லம் இரண்டில் எது நல்லது தெரியுமா?

இன்று பல பேர் ஆரோக்கியம் கருதி சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதிலும் கலப்படம் என்னும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தையில் பல நிறங்களில் வெல்லம் விற்கப்படுகிறது. அதில் எது நல்லது என்பதை பற்றி இதில் தெளிவாக பார்ப்போம்.

உண்மையான வெல்லம் அடர் பிரவுன் நிறத்தில்தான் இருக்கும். சந்தையில் விற்கப்படும் மஞ்சள் நிற வெல்லம் கெமிக்கல் கலந்தவை என பிரபல செஃப் பங்கஜ் படௌரியா தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.

செயற்கையான முறையில் நிறத்தை உருவாக்க கால்சியம் கார்பனேட், சோடியம் பைகார்பனேட் போன்ற கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன.

கரும்புச் சாற்றை நன்றாக கொதிக்க வைத்தால் அது அடர் பிரவுன் மற்றும் கருப்பு நிறத்தில்தான் மாறும். அப்படியென்றால் அடர் பிரவுன் மற்றும் கருமையான நிறத்தில் உள்ள வெல்லம்தான் கெமிக்கல் இல்லாத அசல் வெல்லம்.

வெல்லத்தில் சர்க்கரைப் போன்ற கிரிஸ்டல் தூள்கள் இருக்கக் கூடாது. அதே போல் வெல்லத்தின் சுவை உப்பு அல்லது கசப்புத் தன்மை இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அதில் கரும்பு சாறை குறைத்துவிட்டு இனிப்பு சுவைக்காக சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கலாம்.

எப்படி கண்டுபிடிப்பது?

வெல்லத்தை தண்ணீரில் போட்டு கரைத்துப்பாருங்கள். தண்ணீரில் சுண்ணாம்பு படிவம்போல் இருந்தால் அது கலப்படம் என்று அர்த்தம். தண்ணீரில் நன்கு கரைந்தால் அது கலப்படம் இல்லாத அசல் வெல்லம்.

எனவே இனி வெல்லத்தை வாங்கும்போது அது அசல்தானா என பார்த்து வாங்குங்கள்.

Recent Post