கால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்?

தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவரின் பூஜை சிறப்பு வாய்ந்தது. சிவபெருமானின் ஒரு அம்சமாக எழுந்தவரே ஸ்ரீபைரவர் மூர்த்தியாவார். பைரவருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான தடைகளும் நீங்கும். எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும் என்பதை இதில் பார்ப்போம்.

திங்கள் கிழமை

திங்கள் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று கடக ராசியை சேர்ந்தவர்கள் மஞ்சள் நிறப் பூக்களால் கட்டப்பட்ட மாலையை பைரவருக்கு அணிவித்து ஜவ்வரிசி பாயாசம், அன்னம் படையலிட்டு வந்தால் தாயாரின் உடல்நலம் முன்னேறும்.

செவ்வாய்க்கிழமை

மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை ராகு வேளையில் பைரவருக்கு துவரம் பருப்பு பொடி சாதம், மாதுளம் பழம் படைக்க வேண்டும். மேலும் பைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி வழிபட்டு வந்தால் சகோதர பகை நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

புதன் கிழமை

மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் புதன்கிழமை மாலையில் பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை அணிவித்து, புனுகு பூசி பருப்பு பொடி கலந்த சாதம், பாசிப்பருப்பு பாயாசம் படையல் செய்து வந்தால், மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெறுவார்கள்.

புதன்கிழமை பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து மரிக்கொழுந்து மாலை அணிவித்து பாசி பயிறு பாயாசம், கொய்யாப்பழம், பாசிப் பருப்பு பொடி சாதம் படைத்து வந்தால் வியாபாரத்தில் அமோக வளர்ச்சி ஏற்படும். இதனை காலை 10:30 மணி முதல் 12 மணிக்குள் செய்ய வேண்டும்.

வியாழக்கிழமை

தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் வியாழக்கிழமையில் பைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீய சக்திகள் விலகும்.

வெள்ளிக்கிழமை

துலாம் மற்றும் ரிஷபம் ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை ராகு வேளையில் பைரவருக்கு சந்தன காப்பு செய்ய வேண்டும். தாமரை மலரால் மாலை சூட்டி அவல் கேசரி, சர்க்கரைப் பொங்கல், பானகம் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடை நீங்கி மனதிற்கு பிடித்த வகையில் திருமணம் கைகூடும்.

சனிக்கிழமை

மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமையில் பைரவரை முழு மனதுடன் வழிபட்டு வந்தால் அஷ்டமச் சனி, ஏழரைச் சனி ஆகியவை விலகி நல்லது நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை

சிம்மராசி காரர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்து ருத்ராபிஷேகம், வடைமாலை சாத்தி வழிபட்டு வந்தால் திருமண தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்.

Recent Post