திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் வரலாறு

ஊர் -திருமோகூர்

மாவட்டம் -மதுரை

மாநிலம் -தமிழ்நாடு

மூலவர் -காளமேகப் பெருமாள்

தாயார் -மோகன வல்லி

தலவிருட்சம் -வில்வம்

தீர்த்தம் -தாள தாமரை புஷ்கரிணி ,பாற்கடல் தீர்த்தம்

திருவிழா -வைகாசியில் பிரம்மோற்ஸவம் ஆனியில் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரம் வைகுண்ட ஏகாதசி பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்

திறக்கும் நேரம் -காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சனிக்கிழமைகளில் மட்டும் காலை 5 30 மணி முதல் திறக்கப்படும்

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 94 வது திவ்ய தேசம்.

தல வரலாறு:

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து எடுத்த அமுதத்தை பங்கிட்டுக் கொள்வதில் சர்ச்சை உண்டானது .தேவர்கள் தங்களுக்கு உதவும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர் .பெருமாள் அவர்களின் வேண்டுதலை ஏற்று ,மோகினி வேடத்தில் வந்தார். அசுரர்கள் அவரது அழகில் மயங்கியிருந்த வேளையில் தேவர்களுக்கு அமுதத்தை பரிமாறினார். இதனால் பலம் பெற்ற தேவர்கள் அசுரர்களை ஒடுக்கி வைத்தனர். பின் புலஸ்தியர் எனும் முனிவர் மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டும் என விரும்பினார். எனவே சுவாமி அவருக்கு அதே வடிவில் காட்சி கொடுத்தார். அவரது வேண்டுகோளின்படி பக்தர்களின் இதயத்தைக் கவரும் வகையில் மோகன வடிவத்துடன் இங்கே காட்சி தந்து அருளுகிறார்.

இத்தலத்தில் மிகப்பழமையான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவருக்கான உற்சவர் சிலை 154 மந்திரங்களும் ,மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய ளை 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் காட்சி தரும் இவர் அக்னி கிரீடத்துடன், ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார். ராகு கேது தோஷம் நீங்குவதற்கு பிரகாரத்திலுள்ள விநாயகர் சன்னதியில் ராகு காலத்தில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

மோகன வல்லி தாயார் சன்னதியை விட்டு வெளியே வருவதில்லை. இவளுக்கென விழாவும் கிடையாது இவளது சன்னதியில் சடாரி சேவை ,தீர்த்த பிரசாதமும் தரப்படுவதில்லை .நவராத்திரியின் போது மட்டும் விசேஷ பூஜை செய்யப்படுகிறது .பங்குனி உத்திரத்தன்று சுவாமி, தாயார் சன்னதிக்கு வந்து இருவரும் சேர்ந்து மூன்று மணி நேரம் மட்டுமே காட்சி கொடுக்கிறார்கள்.எனவே சுவாமியுடன் ஆண்டாளே பிரதானமாக புறப்படுகிறாள்.

பங்குனி உத்திரம் அதற்கு மறுநாள் நடக்கும் தெப்பத் திருவிழா மற்றும் மார்கழி 28 ஆகிய நாட்களிலும் சுவாமியுடன் ஆண்டாளை தரிசிக்கலாம். கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் வைபவம் நடக்கும். சிவ பூஜைக்கு உகந்த வில்வம் அவருக்கான தலங்களில் பிரதான விருட்சமாக இருக்கும். ஆனால் பெருமாள் தலமான இங்கு வில்வம் தல விருட்சமாக உள்ளது.

இத்தலத்துப் மோகனவல்லிக்கும் வில்வ இலை அர்ச்சனை செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு திதி தர்ப்பணம் செய்பவர்கள் ,செய்ய மறந்தவர்கள் காளமேகப் பெருமாளை வேண்டி அரிசி மாவில் செய்த தீபத்தில் நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதை மோட்ச தீபம் என்பர் 3, 5 அல்லது 9 என்ற எண்ணிக்கையில் இந்த தீபம் ஏற்றப்படுகிறது.

பெருமாள் சன்னதியில் தரும் தீர்த்தத்தை பெற்று சென்று உயிர் பிரியும் நிலையில் இருப்பவர்களுக்கு புகட்டு கிறார்கள் ,அவர்கள் அமைதியான மரணத்தை சந்திப்பர் என்பதுடன் மோட்சமும் பெறுவர் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் மகாவிஷ்ணு மக்களுக்கு வேண்டும் வரத்தை அருள் மழையாக தருகிறார் .எனவே இவர் காளமேகப்பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள உற்சவர் “ஆப்தன்’ என்று அழைக்கப்படுகிறார். “நண்பன்’ என்பது இதன் பொருள். தன்னை வேண்டுபவர்களுக்கு உற்ற நண்பனாகவும் ,அவர்களது இறுதி காலத்திற்கு பிறகு வழித்துணையாக அருளுவதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது என சொல்லப்படுகிறது.

அழகில்லாத காரணத்தால் திருமணம் தடை படுபவர்கள், கோயில் முன்மண்டபத்தில் எதிரெதிரே உள்ள மன்மதன் ,ரதி சிற்பங்கள் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன .ஆண்கள் மன்மதனுக்கும் ,பெண்கள் ரதிக்கும் சந்தனம் பூசி நெய் தீபம் ஏற்றி கல்கண்டு படைத்து வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

Recent Post