காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் வரலாறு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் பஞ்ச பூத தளங்களில் ஒன்று. இக்கோவில் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இக்கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்றும் பிருத்வி லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறார். கி.பி 4 முதல் கி.பி 9 ம் நூற்றாண்டு வரை பல்லவ மன்னர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர்.

இந்தக் கோயிலை முதன் முதலில் பல்லவர்களே கட்டியுள்ளார்கள் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் இங்கே உள்ளது. அதன் பிறகு சோழர்களால் இக்கோவில் வளர்ச்சியடைந்தது. இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான இராஜ கோபுரத்தை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி 1509 ஆம் ஆண்டு கட்டினார். இந்த கோபுரம் 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது.

3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுகிறது. இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன. 64 சக்தி பீடங்களில் முதன்மையான காமகோடி பீடம் சிறப்புற்று விளங்கும் பெருமை பெற்றது காஞ்சி.

திருக்கைலாயத்தில் பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடினார். இதனால் உலகம் இருளில் மூழ்கியது. அப்போது சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணை திறந்து உலகிற்கு வெளிச்சம் தந்தார். தனது விளையாட்டால் வந்த வினையை கண்டு வேதனைபட்ட பார்வதி இறைவனை சாந்தப்படுத்த கம்பையாற்றின் கரையில் மண்ணில் சிவலிங்கம் அமைத்து தவம் புரிந்தார்.

பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பை ஆற்றில் வெள்ளபெருக்கை உருவாக்கினார். வெள்ளப்பெருக்கை கண்ட பார்வதி சிவலிங்கத்தை அணைத்துக்கொண்டார். உடனே சிவபெருமான் மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதிக்கு காட்சி தந்தார்.பிறகு பார்வதிக்கு இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்று அழைக்கப்படுகிறார்.

திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

Recent Post