காஞ்சி பெரியவர் பற்றிய வாழ்க்கை வரலாறு

காஞ்சி பெரியவர் 1894 ஆம் ஆண்டு மே 20ல் விழுப்புரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சுவாமிநாதன். வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் அனைத்தையும் ஆழமாக கற்றவர். இவர் பரமாச்சாரியார், மகாசுவாமி மற்றும் மகா பெரியவாள், காஞ்சி முனிவர் என அழைக்கப்பட்டார்.

இயல்பான அறிவுக்கூர்மையும் ஆன்மிக நாட்டம் கொண்டவர். சுமார் 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர். கல்வெட்டில் இருக்கும் மொழிகளை இலக்கணத்தோடு விவாதிக்கும் திறமை பெற்றவர். தெய்வத்தின் குரல் என்ற பெயரில் இந்து மதத்தின் தத்துவங்களை புத்தகமாக எழுதியுள்ளார்.

மூன்று முறை கால்நடையாகவே இந்தியா முழுவதும் வலம் வந்து பக்தி நெறியை பரப்பியுள்ளார். மனிதர்களிடமும் விலங்குகளிடமும் அன்பு செலுத்தி வந்தார். அரசியல் தலைவர்கள், வெளிநாட்டுப் பிரமுகர்கள் என யார் வந்தாலும் அனைவரிடமும் சமமான கருணையும் நேசமும் காட்டுவார்.

கடவுள் நம்பிக்கையற்ற எம் ஆர் ராதா, கண்ணதாசன் போன்றவர்கள் பின்னாளில் இவரை சந்தித்து ஆன்மீகவாதியாக மாறினார்கள். உலகப் புகழ் பெற்ற கிறிஸ்தவ பாடகர் ஒருவர் இந்து மதத்திற்கு மாற முயற்சி செய்தபோது உன் மதத்தில் என்ன இல்லை என இங்கு வருகிறாய்? என்று கேள்வி கேட்டார். அன்று முதல் அந்தப் பாடகர் கிறிஸ்தவ மதத்திலேயே இருந்தார்.

சாப்பிடுவதற்கு எண்ணற்ற உணவுகள் வந்தாலும் அதனை தவிர்த்து நெல், பொரி போன்ற உணவுகளை உண்ணுவார். அதுவும் ஒரு வேளை மட்டும். அந்நியத் துணிகளுக்கு எதிராக சுதேசி இயக்கம் நடந்த போது கதர் ஆடைக்கு மாறினார். தனது சீடர்களையும் அவ்வாறே செய்யுமாறு அறிவுறுத்தினார். காஞ்சி மடத்தின் தலைவராக 87 ஆண்டுகள் இருந்து வந்தார். உண்மையான துறவு வாழ்க்கையை வாழ்ந்தவர்.