புதுக்கோட்டையில் சிறுமி நரபலிக்கு ஐடியா கொடுத்த சாமியார் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தை சேர்ந்த வித்யா என்ற 13 வயது சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குடும்ப பிரச்சினை மற்றும் பணத்தேவைக்காக பெண் மந்திரவாதியின் பேச்சை கேட்டு வித்யாவின் தந்தையே இந்த காரியத்தை செய்துள்ளார். பெற்ற மகளை தந்தை நரபலி கொடுத்தது போலீசாருக்கு மட்டுமில்லாமல், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் வித்யாவின் தந்தை பன்னீர் மற்றும் உறவினர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மந்திரவாதியான புதுக்கோட்டையை சேர்ந்த வசந்தி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த முருகாயி ஆகியோரை கைது செய்துள்ளனர்.