ஊர் -திருக்காக்கரை
மாவட்டம் – எர்ணாகுளம்
மாநிலம் – கேரளா
மூலவர் – காட்கரையப்பன்
தாயார் – பெருஞ்செல்வ நாயகி, வாத்ஸல்யவல்லி .
தீர்த்தம் – கபில தீர்த்தம்
திருவிழா – ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் திருவோண உற்சவம் 10 நாள் திருவிழா.
திறக்கும் நேரம் – காலை 5 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.
தல வரலாறு;
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 68 வது திவ்ய தேசம். மகாபலி சக்கரவர்த்தி என்பவன் அசுர குலத்தில் பிறந்தாலும் மிகவும் நல்லவனாக இருந்தான். அவன் தான தர்மத்தில் சிறந்தவனாக விளங்கினான். அவனைவிட வேறு யாரும் தான தர்மத்தில் தலைசிறந்தவராக இருக்கக்கூடாது என்பதற்காக ஒரு யாகம் நடத்தினான்.
அவனது அகந்தையை அழிப்பதற்கு மகாவிஷ்ணு வாமன ரூபத்தில் தோன்றி வந்து மூன்றடி நிலம் கேட்டார். அதற்கு மகாபலி தாங்கள் குள்ளமானவர் உங்கள் காலுக்கு மூன்றடி நிலம் எதற்கும் பயன்படாதே என்றான். ஆனால் அசுர குல குரு சுக்ராச்சாரியார் வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்து தானம் கொடுப்பதை தடுத்தார்.
கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால் இதுவரை செய்த தானம் பலனில்லாமல் போய்விடும் என்று ‘மகாபலி, நினைத்து தானம் தர சம்மதித்தான். பெருமாளும் விஸ்வரூபமெடுத்து ஓரடியால் பூமியையும், இன்னொரு அடியால் ஆகாயத்தையும் அளந்து மூன்றாவது அடியை எங்கே என மகாபலியிடம் கேட்டார்? தன் அகந்தை அறிந்து தலை வணங்கி நின்றான்.
பகவானே இதோ என் தலை, இதைத் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை என்றான் மகாபலி. பெருமாள் அவனை அப்படியே பூமியில் அழுத்தி தன்னோடு இணைத்து கொண்டார். பெருமாள் மகாபலியை பாதாளத்திற்கு அனுப்புவதற்கு முன் மகாபலி ஒரு வரம் கேட்டான். வருடத்திற்கு ஒருமுறை தனது தேசத்து மக்களை சந்திப்பதற்கு அருள் செய்யுமாறு வேண்டிக் கொண்டான்.
மகாபலிக்கு அருள்புரிந்து ஆவணி மாதம் திருவோண நட்சத்திர நாளில் இதை நினைவுகூறும் வகையில் கேரளாவில் ஓணம் பண்டிகையின்போது மகாபலி தான் வேண்டிக் கொண்டபடி, இந்த விழாவில் கலந்துகொண்டு குடிமக்களை வாழ்த்துவதாக ஐதீகம்.
கோவிலுக்கு வெளியே தனி சன்னதியில் தேவி பகவதி, சாஸ்தா, சுந்தர யக்க்ஷி, கோபாலகிருஷ்ணன், நாகர் ஆகியோர் உள்ளனர். மகாபலி சிறந்த சிவபக்தன், அவன் வழிபாடு செய்த சிவலிங்கம் இங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இங்கு சைவ ,வைணவ இருதரப்பினரும் வழிபாடு செய்கின்றனர். இந்தக் கோயிலில் வாமனருக்கு ஒரு கருவறையும், சிவபெருமானுக்கு ஒரு கருவறையும் தனித்தனியே உள்ளன.
கேரளத்தில் பழமை வாய்ந்த கோயில் இது. தமிழ் கல்வெட்டுக்கள் இங்கு உள்ளது. கி.பி. 9 முதல் 12 ம் நூற்றாண்டுவரை சேரமன்னர்கள் இத்தலத்தை பிரபலமாகி உள்ளனர். 1825ல் திருவிதாங்கூர் அரசு இக்கோயிலை எடுத்துக்கொண்டது. 1948 ல் புனர்பிரதிஷ்டை நடந்துள்ளது. தாயார் ஸ்ரீ பெருஞ்செல்வ நாயகி தாயாருக்கு தனி சன்னதி கிடையாது. 10 மற்றும் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 18 கல்வெட்டுகள் இந்த தலத்தில் காணப்படுகின்றன.