ஊர்: திருக்கண்ணங்குடி
மாவட்டம்: நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு.
மூலவர் : லோகநாதப்பெருமாள்
தாயார் : லோக நாயகி
ஸ்தலவிருட்சம்: மகிழ மரம்
தீர்த்தம்: சிரவண புஷ்கரிணி
சிறப்பு திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி
திறக்கும் நேரம்: காலை 8:00 மணி முதல் 12:00மணி வரை, மாலை 5:00மணி முதல் இரவு 9:00மணி வரை.
தலவரலாறு
பெருமாள் பக்தியில் வசிஷ்டர் மிகச் சிறந்தவர். ஒரு முறை வசிஷ்டர் வெண்ணையில் கிருஷ்ண விக்ரகம் செய்து அதை தன் பக்தியின் மேன்மையால் உருகாமல் பூஜை செய்து வந்தார்.
இந்த பக்தியைக் கண்ட கிருஷ்ணர். சிறு குழந்தை வடிவம் கொண்டு, கோபாலன் ஆக வசிஷ்டர் வீட்டுக்குள் சென்றார். அங்கு வசிஸ்டர் பூஜை செய்து கொண்டிருந்த வெண்ணையை கிருஷ்ணர் அப்படியே எடுத்து விழுங்கி விட்டார். இதை கண்ட வசிஷ்டர் அந்த சிறுவனை விரட்டிச் சென்றார் அப்போது மகிழ மரத்தின் அடியில் பல ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்தனர்.
வசிஷ்டரால் விரட்டப்பட்ட சிறுவன் கிருஷ்ணர் என அறிந்த அந்த ரிஷிகள். ஞானதிருஷ்டியால் கிருஷ்ணரை பாசக் கயிற்றால் கட்டிப் போட்டனர். இவர்களது பிடியில் இருந்து தப்பித்து, வசிஷ்டன் என்னை விரட்டி வருகிறான் வேண்டியதை சீக்கிரம் கேளுங்கள் என்றார்.
ரிஷிகள் அதற்கு கிருஷ்ணா நீ எங்களுக்கு தரிசனம் கொடுத்தது போல் இத்தளத்திற்கு வருவோருக்கு தரிசனம் தர வேண்டும் என வேண்டிக் கொண்டனர். இவர்களது வேண்டுதலுக்கிணங்க கண்ணன் இத்தலத்தில் நிற்க, விரட்டி வந்த வசிஷ்டர் கிருஷ்ணரது பாதங்களை பற்றிக் கொண்டதும். கோபுரங்களும், விமானங்களும் உண்டாகி விட்டன. கண்ணன் கட்டுப்பட்டு நின்றபடியால் “கண்ணங்குடி” என்று அழைக்கப்பட்டது
பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இது 18வது தலம். இத்தல பெருமாளின் ஜென்ம நட்சத்திரம் திருவோணம். அனைத்து திவ்ய தேசங்களிலும் கருடாழ்வார் கைகளை குவித்து வணங்குவார்.
இத்தலத்தில் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு வைகுண்டத்தில் இருப்பதைப்போல் காட்சி கொடுக்கிறார். இத்தலப் பெருமானை பிரம்மா, கௌதமர், உபரிசரவசு, வசிஷ்டர், பிருகு, திருமங்கை ஆழ்வார் ஆகியோர் தரிசித்துள்ளனர்.
திருநீரணி விழா என்பது சிறப்பான விழாவாகும். இவ்விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை தான் நடைபெறுகிறது. இதற்கு அனைவரும் விபூதி அணிந்து வருவார்கள். சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்த விழா எடுத்துக்காட்டாக விளங்குகிறது.