மகா சிவராத்திரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

சிவராத்திரியன்று விரதம் இருப்பதால் நாம் தெரியாமல் செய்த பாவங்கள், தெரிந்தே செய்த பாவம் கூட நம்மை விட்டு நீங்கிப் போகும் என்பது ஐதிகம்.

சிவராத்திரி ஐந்து வகைப்படும்

நித்திய சிவராத்திரி
பட்ச சிவராத்திரி
மாத சிவராத்திரி
யோக சிவராத்திரி
மகா சிவராத்திரி

சிவராத்திரி உருவானது எப்படி?

பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும், அழிந்து விட்ட நிலையில் அம்பிகை உமாதேவி இரவுப் பொழுதில் பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தார். 4 ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார். இறுதியில் அம்பிகை, ஈஸ்வரனை வணங்கி அடியேன் தங்களை பூஜித்த இந்த இரவை தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தையே கூறி அந்த நாளே சிவராத்திரியாக கொண்டாட வேண்டும் என வேண்டிக் கொண்டார் .

சிவராத்திரியன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவனை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான செல்வங்களையும் தந்து முடிவில் மோட்சத்தை அருள வேண்டும். என உமாதேவியார் வேண்டிக் கொண்டார். இதனால் ஆனந்தம் அடைந்த சிவபெருமான், “அப்படியே ஆகட்டும்” என்று அருள் புரிந்தார்.

இன்னொரு அருமையான கதையும் உண்டு

ஒரு வேடன் வேட்டையாட காட்டிற்கு சென்றான். வெகுநேரம் அலைந்தும் ஒரு விலங்கு கூட சிக்கவில்லை.இதனால் அந்த வேடன் மனமுடைந்து காணப்பட்டார். நன்றாக இருட்டிய நேரத்தில் ஒரு புலி வேடனை நோக்கி வந்து கொண்டிருந்தது. பயந்துபோன வேடன் அங்கிருந்த வில்வ மரத்தில் ஏறிக் கொண்டான். ஆனால் புலி நகராமல் அந்த மரத்தை சுற்றி சுற்றி வந்தது. இந்த புலியிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று நினைத்துக்கொண்டே அந்த மரத்தில் இலைகளை கீழே பறித்துப் போட்டுக் கொண்டே இருந்தான்.

அந்த வில்வ இலை மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்துகொண்டே இருந்தது. அன்றைய தினம் மகா சிவராத்திரி. இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை பூஜித்த காரணமாக அவன் செய்த பாவங்களுக்கு சிவபெருமான் முக்தி அளித்து மோட்சத்தை அளித்தார். என்று புராணக் கதை சொல்கிறது. ஆகையால் அந்த ஒரு நாளாவது இரவு உறங்காமல் விரதமிருந்து சிவ பெருமானை வணங்குவோம்.

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

முதல் நாள் ஒரு வேளை உணவு உண்டு சுகபோகங்களை தவிர்த்து முழு மனதுடன் சிவனை நினைத்து வழிபட வேண்டும்.

சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி சூரிய உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜை அனைத்தும் செய்து முடிக்க வேண்டும்.

அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்று சிவனை வணங்க வேண்டும். ஆலய தரிசனம் முடிந்த பிறகு வீட்டின் சிவராத்திரி பூஜைக்கு உண்டான இடத்தை சுத்தம் செய்து மாலை தோரணங்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.

பகலில் நீராடி உச்சிகால பூஜை செய்து முடிக்க வேண்டும். அதன்பின் ஆலயத்திற்கு சென்று சிவராத்திரி பூஜைக்காக மலர்கள், பழங்கள், இளநீர் முதலானவற்றில் இயன்றவற்றை தந்து வீடு திரும்பவும்.

வீடு திரும்பியதும் மறுபடியும் குளித்துவிட்டு மாலை நேர பூஜைகளை முடிக்க வேண்டும். ஏற்கனவே அலங்கரிக்கப்பட்ட பூஜை இடத்தில், ஒரு உயர்ந்த பீடத்தில் சிவலிங்கத்தை வைத்து, நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்ய வேண்டும்.

சிவபூஜை செய்ய இயலாதவர்கள், அருகில் உள்ள சிவ ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் கலந்துகொண்டு சிவனின் அருளை பெறலாம்.

அன்று இரவு முழுவதும் கோவிலிலோ அல்லது பூஜை அறையிலோ சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள், தேவாரம், திருவாசகம் முதலானவற்றை படிப்பது மிக நல்லது.

சிவராத்திரி அன்று பகலில் தூங்கக் கூடாது. இரவில் கண்விழிக்க வேண்டும். அதற்காக திரைப்படங்கள் பார்ப்பது, மொபைல் பார்ப்பது தவறு.

உடலாலும் மனதாலும் சிவனை நினைத்து வழிபட்டால் சிவன் அருள் கிடைத்து வாழ்வு வளம் பெறும்.

Recent Post