மங்குஸ்தான் பழத்தின் பயன்கள்

பல் ஈறுகள் ஆரோக்கியமாக பாதுகாக்கும் பழ வகைகளில் முக்கிய பழமாக மங்குஸ்தான் பழம் இருக்கிறது. குழந்தைகளுக்கு பல் முளைக்கும் சமயங்களில் பேரிச்சம்பழத்தை அரைத்துக் கொடுப்பார்கள் அல்லது அப்படியே கொடுப்பார்கள்.

குழந்தைகளின் பல் ஆரோக்கியமாக வளரும் சமயத்தில் மங்குஸ்தான் பழத்தையும் குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் பல் மற்றும் ஈறுகள் வளரும்போதே ஆரோக்கியமாக வளரும்.

இப்பழத்தின் தாயகம் மலேசியா ஆகும். இதன் தாவரப்பெயர் கார்சினா மேங்கொஸ்தானா (Garcinia mangostana). மங்குஸ்தான் பழத்திற்கு வேறுசில, உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருத்துவ குணங்களும் உண்டு அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

தாகத்தை தீர்க்கும்

மங்குஸ்தான் பழத்தோடு சிறிதளவு சர்க்கரை சேர்த்து சாப்பிடும்பொழுது, அதிகமான வெப்ப காலங்களில் உடலில் ஏற்படும் அதிக தாகம், அதிக வெப்பம் போன்றவற்றை தீர்க்கிறது. இப்பொழுது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் அதிகம் சாப்பிடுகின்றனர்.

சீதபேதி, ரத்தபேதி போக்கும்

மங்குஸ்தான் பழத்தின் தோல், பட்டை, இலை போன்றவற்றிலும் மருத்துவ குணங்கள் உண்டு. இப்பழத்தோலில் துவர்ப்பு சுவை தரும் டானின் எனும் சத்து இருப்பதால் கடுமையான சீதபேதி, ரத்தப் பேதிக்கு மருந்தாக பயன்படுகிறது.

வயிற்றுப்போக்கு

சிறுநீர் கோளாறு, வெள்ளைப்படுதல், வயிற்றுப்போக்கு போன்றவைகள் குணமாக பழத்தோலை சீவி அரைத்து பாலிலோ அல்லது மோரிலோ கலந்து சாப்பிடலாம்.

அதேபோல் நாள்பட்ட சீதபேதி குணமாக, இதன் பழத்தை வேக வைத்து, மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர ஓரிரு நாட்களில் முற்றிலுமாக குணமடைந்து விடும்.

உடல் எடை குறைய

மங்குஸ்தான் பழம் சீசன் சமயங்களில் தினமும் இரண்டு அல்லது மூன்று பழங்கள் எடுத்துக்கொள்வதால் அதிகப்படியான எடை குறைந்து உடல் சரியான எடையில் இருக்கும்.

கொழுப்பைக் கரைக்கும்

மங்குஸ்தான் பழத்தின் 100 கிராம் தசைப்பகுதியில் உடலுக்கு தேவையான கலோரி கிடைக்கிறது. மேலும் 13 சதவிகிதம் நார்சத்தும், 12 சதவிகிதம் வைட்டமின் சி யும் இதில் அடங்கியுள்ளது. வைட்டமின் சி உடலில் வேகமாக செயல்பட தொடங்குகிறது.

இதனால் உடலில் உள்ள கொழுப்பு, கெட்ட கொலஸ்ட்ரால் போன்றவற்றை நார்சத்து உறிஞ்சி வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது. இப்பழத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் இல்லாததால் உடல் எடையை அதிகரிக்க விரும்பாதவர்கள் இந்த பழத்தினை சாப்பிடலாம்.

தோலைப் பாதுகாக்கும்

ஒரே ஒரு மங்குஸ்தான் பழத்தை சாப்பிடுவதால் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி சத்து கிடைத்துவிடுகிறது. இதனால் தோலில் உண்டாகும் குறைபாடுகள், சுருக்கம் போன்றவற்றை போக்கி ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. மேலும், உடலில் ஆறாத புண்கள் இருந்தாலும் விரைவில் குணமாவதற்கு வைட்டமின் சி உதவி புரியும்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய்களை குணமாக்கும் பி குரூப் வைட்டமின்களான நியாசின், தயாமின், ஃபோசிக் அமிலம், தாமிரம், மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இப்பழத்தில் உள்ளன. புரதம், மாவு சத்து, கொழுப்பு, போன்றவைகள் வளர்சிதை சமயங்களில் உடலுக்கு சக்தியைத் தருகிறது.

உடல் செல்கள் ஆரோக்கியமாக இருக்கவும், இதயத்துடிப்பு சீராக இருக்கவும், ரத்த அழுத்தம் இல்லாமல் இருக்கவும் பொட்டாசியம் சத்து பெரிதும் உதவியாக இருக்கிறது. ரத்த ஓட்டம் சீராக இருப்பதால் இதய நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

தாமிர உப்பு உடலுக்கு சிவப்பு நிறத்தை தருகிறது. மாங்கனீசு உப்பு, கால்சியத்துடன் சேர்ந்து எலும்பு மண்டலத்தை வலுவாக்குகிறது. மக்னீசியம் சத்து மன இறுக்கத்தை போக்கி ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கிறது.

கண்களை பாதுகாக்கும்

சிலர் கணினிகளிளும், மொபைலிலும் அதிக நேரம் செலவழிப்பார்கள். இதனால் கண் எரிச்சல் ஏற்படும். இதற்கு மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் சம்பந்தமான நரம்புகள் புத்துணர்ச்சியாகும்.

மூலத்தை போக்கும்

நாம் எடுத்துக்கொள்ளும் உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் வாய்வுத் தொல்லை ஏற்பட்டு அதனால் மூலம் உருவாக வாய்ப்புண்டு. இதனைப் போக்க மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் அது மூல நோயை முற்றிலுமாக குணமாக்கும்.

புற்றுநோயைத் தடுக்கும்

மங்குஸ்தான் பழத்தில் ஃபாலிபீனால்களான ஆல்பா சாந்தோன்ஸ், காமா சாந்தோன்ஸ் இந்த சத்துக்கள் காணப்படுகின்றன. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து புற்றுநோய் சம்பந்தமான செல்களை வளரவிடாமல் தடுத்து உடலை பாதுகாக்கிறது.

மங்குஸ்தான் பழத்தின் தீமைகள்

பொதுவாக அனைத்து வித பழங்களும் உடலுக்கு நன்மை தரக்கூடியது. ஒரே நேரத்தில் அதிகமாக எடுத்துக்கொள்ளாமல் தினமும் 2 அல்லது 3 வீதம் எடுத்துக்கொண்டால் உடலுக்கு நன்மை பயக்கும்.

Recent Post