ரசாயன கலவைகளை தவிர்த்து, இயற்கையான மருதாணி இலையை பயன்படுத்துவது உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது.
மருதாணி என்ற சிறிய செடியிலிருந்து மருதோன்றிப் பூ கிடைக்கிறது. மருதாணி இலையை அரைத்து பெண்கள், அழகுக்காக கைகளில் பூசுகிறார்கள். இது உடலுக்கு குளிர்ச்சியையும் தரும்.
மருதாணி இலைகளுக்கு உள்ளது போல, மருதாணி பூக்களுக்கும் உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது. தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் மருதாணிப் பூக்களை கொத்தாகப் பறித்து தலைக்கு அடியில் வைத்து படுத்தால் சுகமான தூக்கம் வரும்.
மருதாணி இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் புண்கள், கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும்.
மருதோன்றிப் பூவை நன்றாக காய வைத்து, அதோடு எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும். பொடுகு தொல்லை நீங்கும். இந்த மருதாணி செடியை அவரவர் வீட்டில் வைத்து வளர்க்கலாம். இதற்கு சிறிய இடம் இருந்தாலே போதும்.
மற்ற பூக்களை விட மருதாணி பூக்களின் மணம் சற்று வித்தியாசமாக இருக்கும். மருதாணி விதை எண்ணெயை உடலில் தடவ உடல் எரிச்சல் குணமாகும். மருதாணி இலைகளை அரைத்து பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.