மயக்கம் ஏற்படுவது எதனால் என்பது பற்றியும், அதன் வகைகள் பற்றியும், மயக்கம் வருவதை எப்படி தடுக்க முடியும் என்பது பற்றியும் இதில் தெளிவாக பார்க்கலாம்.
மயக்கம்:
மயக்கம் என்பது பொதுவாக இருவகைகளாக பிரிக்கப்படுகிறது. ஒன்று நெடு மயக்கம், இன்னொன்று குறு மயக்கம். இதில், குறு மயக்கம் என்பது அதிகப்படியான நேரங்களில் மனிதர்களுக்கு ஏற்படுகிறது.
குறு மயக்கம் வரும்போது எப்படி இருக்கும்..?
சாதாரணமாக தரையில் நின்றுக் கொண்டே இருப்போம், கண்கள் இறுக்கமாக மாறி, நிற்கும் இடம் இருட்டிக் கொண்டு வந்து, உடல் படபடப்பாகும். திடீரென்று தரையில் பொத்தென்று விழுவோம். குறு மயக்கம் வரும்போது இப்படி தான் இருக்கும்.
குறுமயக்கம் ஏன் வருகிறது..?
உடலின் ரத்த ஓட்டம், இடுப்புக்கு கீழே சரியாக இல்லாதபோது, மூளைக்கு ரத்தம் சரியாக போகாது. இதனால், மூளையின் செயல்பாடு நிறுத்தப்பட்டு, குறு மயக்கம் ஏற்படுகிறது.
எந்த நேரங்களிலெல்லாம் குறுமயக்கம் வரும்..?
கூட்டம் அதிகமாக உள்ள இடங்கள், காற்றோட்டம் குறைவாக உள்ள இடங்கள், கல்லூரிகள், பள்ளிகள், குறிப்பாக, காலை நேர இறை வணக்கத்தின்போது மாணவர்கள் மயக்கம் அடைவார்கள். இது அனைத்துமே குறுமயக்கம் தான். இதுமட்டுமின்றி, அதிகமாக விளையாடுதல், அதிக உடற்பயிற்சி செய்தல், இரவு சரியாக தூக்காமல் இருத்தல், காலை உணவை சாப்பிடாமல் இருத்தல், வெயிலில் நீண்ட நேரம் இருத்தல், மலைகள், படிக்கட்டுகள் போன்ற மேடான பகுதிகளில் வேகமாக நடத்தல் போன்ற காரணங்களாலும் குறுமயக்கம் ஏற்படும்.
இதற்கான தீர்வு:
மயக்கம் வருவதற்கு முன்பு, சில நிமிடங்கள் அதற்கான அறிகுறிகள் நமக்கு தெரியும். அந்த சமயத்தில், தரையில் அமர்ந்து விட வேண்டும் அல்லது படுக்கைகள் ஏதேனும் இருந்தால் அதில் படுத்துவிட வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால், எந்த விதமான மயக்கமும் நம்மை அண்டாது. மேலும், சரியான வாழ்க்கை முறையையும் கடைப்பிடியுங்கள்.