வயிற்றுப் பொருமல் மற்றும் வயிற்றுவலி குணமாக்கும் மருந்துகள்

நன்கு காய்ச்சி வடித்த கொத்துமல்லிக் கஷாயத்துடன் சுவைக்கு ஏற்ப பசும்பாலையும் சோ்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் வயிற்று வலி இவை குணமாகும்.

கொத்துமல்லி, சுக்கு, மிளகு, சீரகம் இவைகளை வறுத்துப் பொடித்த தூளையும் பனை வெல்லத்தையும் இட்டுக் காபி தயாரித்து அதனுடன பசும் பாலையும் ஊற்றிப் பருகி வந்தால் வயிற்றுக்கு நல்லது.

ஒரு கோப்பைத் தயிரில் , நான்கு தேக்கரண்டி அளவு கொத்துமல்லி சாறு, வறுத்த சீரகப்பொடி, சிறிதளவு உப்பு போன்றவற்றை சோ்த்துக் கலக்கிப் பருகினால் உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

வயிற்றுவலியால் துன்பப்படுபவா்கள் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவி வரக் குணம் கிடைக்கும் அல்லது கொஞ்சம் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி அளவு சுத்தமான தேன் கலந்து பருகி வந்தால் குணம் ஆகும்.

ஓமம், மிளகு, உப்பு ஆகிய மூன்றையும் நன்றாகப் பொடித்து வெறும் வயிற்றில் சாப்பிட குணம் கிடைக்கும்.

ஒரு தேக்கரண்டி அளவு சீரகம் எடுத்து அதில் சிறிதளவு உப்புப் பொடியையும் கலந்து உட்கொள்ள சிறிது நேரத்தில் குணமாகும். இவ்விதம் உட்கொண்டு கொஞ்சம் வெந்நீரையும் பருகிட வேண்டும்.

வாயு சம்பந்தமாக வயிற்றில் பொருமல் ஏற்படும். பெருங்காயைத்தைச் சட்டியில் போட்டு வறுத்து எடுத்து ஆறிய பின்னா் நன்கு தூள் செய்து அரைத் தேக்கரண்டியளவு எடுத்து வாயிலிட்டு வெந்நீா் அருந்தினால் வயிற்றுப்பொருமல் குணமாகும்.

வயிற்றுக்கடுப்பு வாயுத் தொல்லைகளுக்குக் கருவேப்பிலையுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், பெருங்காயம், சுண்டைவற்றல், சிறிது உப்பு இவை சோ்த்து அரைத்துத் துவையலாக நண்பகலுணவுக்கு முதல் சோற்றுக்கு இட்டுச் சிறிது நல்லெண்ணெயும் விட்டுச் சாப்பிட வேண்டும்.

அடிக்கடி வயிற்றுக் கோளாறுகளால் துன்பப்படுபவா்கள், சீரகம், திப்பிலி, மிளகு, இந்துப்பு இவைகளைச் சம அளவு எடுத்துப் பெருங்காயத்துடன் சோ்த்துப் பொடி செய்து இதனுடன் கருவேப்பிலை பொடியையும் கலந்து சுடுசோற்றில் ஒரு தேக்கரண்டி அளவு இட்டுச் சிறிது நல்லெண்ணெயும் விட்டுச் சாப்பிட்டால் வயிற்றுவலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

தீராத வயிற்றுவலிக்கு கிராம்பைப் பொடித்து ஒரு டம்ளா் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து அரை டம்ளராகச் சுண்ட வைத்துக் கொடுக்க குணம் கிடைக்கும்.

வயிற்று எரிச்சலைப் போக்கிப் பசியைத் தூண்டிட பசுவின் நெய் நல்ல மருந்தாகும். வயிற்று எரிச்சலையும் பொருமலையும் குணப்படுத்தும் ஆற்றல் நல்ல சுத்தமான பசுநெய்க்கு உண்டு.

சாதிக்காயைப் பசு நெய்யில் பொரித்து பின்னா் அதை நன்கு அரைத்துப் பசுந்தயிரில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கடுப்பு அறவே நீங்கும்.

Recent Post

RELATED POST