மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோவில், மதுரைக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும் கோவிலாக உள்ளது. சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் இத்தலம் கருதப்படுகிறது.
மீனாட்சி அம்மன் கோவில் சங்ககாலத்திற்கு முன்பே கட்டப்பட்ட கோவிலாகும். அதாவது சுமார் 2300 முதல் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
இக்கோவிலில் கிழக்கு கோபுரத்திற்கு அருகில் 7,000 சதுர அடியில் பிரமாண்டமான ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. 1494 ஆம் ஆண்டு மதுரையை ஆண்ட முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டது. இந்த மண்டபத்தில் 985 தூண்கள் உள்ளன. இதில் 22 இசை எழுப்பக்கூடிய சிறிய தூண்கள் உள்ளன.
இக்கோவிலில் சில சன்னதிகளை கட்டுவதற்காக வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் மண் எடுக்கும் போது விநாயகர் சிலை கிடைத்தது. அந்த சிலை இக்கோவிலில் முக்குருணி விநாயகர் ஆக உள்ளது. விநாயகர் சதுர்த்தி தினத்தில் இந்த விநாயகர் சிலை முன்பு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில், எட்டுகோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய, நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றன. இதில் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.
இங்கு நடக்கும் மீனாட்சி திருக்கல்யாணம், சித்திரை திருவிழா புகழ் பெற்றவை. மேலும் நவராத்திரி, திருத்தேர் பவனி, பட்டாபிஷேகம், தெப்பத்திருவிழா என பல்வேறு விசேஷங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில், தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இக்கோவிலில் உள்ள மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக்கல்லால் ஆனது. இதனால் மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது.
இக்கோவிலுக்கு சென்று மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்றும், இந்த கோவிலை பூலோக கைலாசம் எனவும் அழைக்கப்படுகின்றது.
இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம், பிரசித்தி பெற்றதாகும்.
மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மீனாட்சி அம்மனை வழிபட்ட பின்பே சுந்தரேசுவரரை வழிபடும் வழக்கம் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்
காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை.