எப்போதும் கைகளில் ஸ்மார்ட் போனும் காதுகளில் ஹெட்போனுடன் திரியும் நமக்கு மொபைலும் ஹெட்போனும் நமது உடல் உறுப்புகளில் ஒன்றாகி விட்டது. அடுத்தவர்களுக்கு தொந்தரவு தராமல் மனதை ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக இன்று பல பேர் ஹெட் போன் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.
ஹெட்போனிலிருந்து 90 டெசிபல் ஒலி காதுகளுக்குள் நேரடியாக செல்கிறது. இது அதிக நேரம் தொடர்ந்தால் காது கேட்பதில் சிக்கல் தொடங்கி காது கேளாமை பிரச்சனை வரை ஏற்படுத்தும்.
பிறர் பயன்படுத்தும் ஹெட்போன்களை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தினால் காது சம்பந்தப்பட்ட தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே நீங்கள் பயன்படுத்தும் ஹெட்போன்களை நீங்கள் மட்டும் பயன்படுத்துங்கள்.
மிகவும் அடைப்பான ஹெட்செட்கள் உங்கள் காதுகளுக்கு இனிமையான இசையை தந்தாலும் அது உங்கள் காதுகளுக்குள் காற்றை அனுப்ப மறுக்கிறது. இதனால் காது இரைச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
காதுகளின் ஓட்டைக்குள் செல்லும் ஹெட்போன்களை தவிர்க்க வேண்டும். காதுகளுக்கு வெளியே இருக்கும் படியான பெரிய ஹெட்போன்களை பயன்படுத்துவது நல்லது.
சாதாரண ஹெட்போன் தானே என்று அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். உங்கள் ஹெட் போனை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதிக நேரம் பயன்படுத்துவதை தவிருங்கள்.
முக்கியமாக சாலைகள், ரயில் தண்டவாளங்கள் கடக்கும் போது ஹெட் போன் தவிர்த்திடுங்கள் அல்லது ஒலி அளவை குறைத்து கேளுங்கள்.
சார்ஜ் ஏற்றிக்கொண்டு போன் பேசுவது இன்டர்நெட் பயன்படுத்துவது ஹெட் போனில் பாடல் கேட்பது போன்ற பழக்கங்களை தவிர்ப்பது நல்லது.