நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்

ஊர்– திருநீர்மலை

மாவட்டம் -காஞ்சிபுரம்

மாநிலம் -தமிழ்நாடு

மூலவர் -நீர்வண்ணர், ரங்கநாதர், உலகளந்த பெருமாள், பால நரசிம்மர்.

தாயார் -அணிமாமலர்மங்கை ,ரங்கநாயகி

தல விருட்சம் -வெப்பால மரம்

தீர்த்தம்– சித்த, சொர்ண, காருண்ய தீர்த்தம், சீர புஷ்கரிணி .

திருவிழா – சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், வைகாசி வசந்த உற்சவம் ,ஆனி கோடை உற்சவம், புரட்டாசி சனி பவித்திர உற்சவம் கொண்டாடப்படுகிறது .

திறக்கும் நேரம்– காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

தல வரலாறு ;

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 62வது திவ்ய தேசம் ஆகும். பிருகு முனிவர் மற்றும் மார்க்கண்டேய மகரிஷி ஆகிய இருவரும் ஸ்ரீரங்கத்தில் மகாவிஷ்ணுவை சயன கோலத்தில் தரிசித்து தங்கள் இருப்பிடம் நோக்கி இவ்வழியே சென்றனர். அப்போது பெருமாளின் சயனக்கோலத்தின் அழகை மீண்டும் தரிசிக்க எண்ணம் தோன்றியது. எனவே இத்தலத்தில் அந்த திருக்கோலத்தைக் காட்ட வேண்டும் என இருவரும் உருக்கமாக வேண்டினர்.

சுவாமி “போக சயனத்தில்’ ரங்கநாதர் ஆக இங்குள்ள மலையில் காட்சி கொடுத்து, மலைக்கோயில் மூர்த்தியாக அருளினார். இவருக்கு அபிஷேகம் கிடையாது வருடத்தில் ஒருமுறை கார்த்திகை மாதத்தில் தைலக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது.

இது ஒரு மலைக் கோயில் ஆகும். மலையிலும், கீழேயும் இரண்டு பெரிய கோயில்கள் அமைந்துள்ளன. பெருமாள் நான்கு நிலைகளில் 3 அவதார கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்து பெருமானை தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்தபோது மலையைச் சுற்றிலும் நீரால் சூழப்பட்டு இருந்தது. இருந்தும் எப்படியாவது இறைவனை தரிசிக்க வேண்டுமென கோயில் எதிரேயுள்ள மற்றொரு மலையில் தங்கி காத்திருந்தார்.

நாட்கள் சென்றன, ஆனால் தண்ணீர் குறைந்தபாடில்லை. இருந்தும் நீர் வடியும் வரை காத்திருந்து இறைவனை காணவேண்டும் என தீர்க்கமாக இருந்தார் ஆழ்வார். தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள், நின்ற கோலத்தில் நீர்வண்ணப்பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மர், சயன கோலத்தில் ரங்கநாதர், நடந்த கோலத்தில் உலகளந்த பெருமாள், என நான்கு கோலங்கள் காட்டியருளினார். இத்தளத்தில் நரசிம்மர் சாந்தமாக பால ரூபத்தில் காட்சி தந்து மலையில் தனி சன்னதியில் உள்ளார்.

இந்த கோயிலின் எதிரில் உள்ள புஷ்கரணியில், சித்த தீர்த்தம், சொர்ண தீர்த்தம், காருண்ய தீர்த்தம், க்ஷீர தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் சங்கமித்துள்ளன. சுயம்புவாகத் தோன்றிய எட்டு பெருமாள் தலங்களில் திருநீர்மலையும் ஒன்று. மலையில் அமைந்த கோயில் என்பதால் இங்கு பவுர்ணமி தோறும் கிரிவல வைபவம் விசேஷமாக நடக்கிறது.

Recent Post